கோவில் திருவிழா நடத்த அனுமதிக்க கோரி பொதுமக்கள் திடீர் போராட்டம்
மணப்பாறை அருகே கோவில் திருவிழா நடத்த அனுமதிக்க கோரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கரடிப்பட்டியில் வேலமலை கன்னிமார், ஊர்க்காவல் அய்யனார், காமாட்சி அம்மன் கோவில்கள் உள்ளது. அறநிலையத்துறையின் கீழ் உள்ள இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடிமாதத்தில் திருவிழா கரடிப்பட்டி மற்றும் அம்மாபட்டியைச் சேர்ந்த ஊர் பொதுமக்களால் கொண்டாடப்படுவது வழக்கம் . இந்த நிலையில் இந்த ஆண்டு கடந்த வாரம் திருவிழா நடத்துவதாக இருந்த நிலையில் கோவில் பூசாரிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக திருவிழா தடைபட்டது. இதனை அடுத்து இரண்டு ஊர் பொதுமக்களும் திருவிழா நடத்த அனுமதிகேட்டனர். இந்நிலையில் மருங்காபுரி வட்டாட்சியர், மற்றும் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் ( ஆர்.டி.ஓ.) என இரண்டு முறை அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றும் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. இதனையடுத்து இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு சென்று இருந்த நிலையில் அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த கரடிப்பட்டி மற்றும் அம்மாபட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் துவரங்குறிச்சிக்கு திரண்டு வந்து அங்குள்ள பூத நாயகி அம்மன் கோவில் வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இங்கு போராட்டம் நடத்த அனுமதி இல்லை எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயன்றனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசாரைக் கண்டித்தும், திருவிழா நடத்த அனுமதிக்க வேண்டியும் துவரங்குறிச்சி – மணப்பாறை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த தமிழர் தேசம் கட்சியின் தலைவர் செல்வகுமார் பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் மருங்காபுரி வட்டாட்சியர் மற்றும் மணப்பாறை டிஎஸ்பி பேச்சு வார்த்தை நடத்தி நாளை பேச்சு வார்த்தை நடத்தி சுமூகதீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். திருவிழா நடத்த அனுமதிக்கக் கோரி கிராம மக்கள் நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.