தாய்ப்பால் வாரத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

0 211
Stalin trichy visit

திருச்சி, ஆக. 2 – மணப்பாறையில் தாய்ப்பாலின் அவசியத்தை உணர்த்த நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் திரளானோர் பங்கேற்றனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள சிந்துஜா மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தைகள் நல சிறப்பு பிரிவு, ஆதவன் வெல்பர் டிரஸ்ட் சார்பில் உலக தாய்ப்பால் வாரத்தினை முன்னிட்டு தாய்ப்பால் விழிப்புணர்வு பேரணி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பெ.கலையரசன் தலைமையில் நடைபெற்றது. மணப்பாறை நகர்மன்ற தலைவர் கீதா.ஆ.மைக்கேல்ராஜ், காவல் துறை துணை கண்காணிப்பாளர் S.மரியமுத்து ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

கோவில்பட்டி சாலையில் உள்ள நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் இருந்து பேரணி தொடங்கி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறைவு பெற்றது. பேரணியில் தாய்ப்பாலின் அவசியம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகளை மாணவ – மாணவிகள் ஏந்திக் கொண்டு கோசங்களை எழுப்பியபடி சென்றனர்.

பின்னர் இறுதியாக தாய்ப்பாலின் மகத்துவம் குறித்தும், தாய்ப்பால் குழந்தைகளுக்கு எவ்வளவு ஆரோக்கியத்தை தரும் உணவு என்றும் சிந்துஜா மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தை நல சிறப்பு மருத்துவர் V.P. கார்த்திகேயன் மாணவ- மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் தாய்ப்பால் கிடைப்பதற்கான இடைவெளியை குறைப்போம், தாய்ப்பால் ஊட்டுதலை ஆதரிப்போம், தாய்மையே தாய்ப்பாலின் மகத்துவத்தை அறிந்து கொள்வோம் என்பது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்விற்கான ஏற்பாடுகளை சிந்துஜா மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் மற்றும் குழந்தை நல சிறப்பு மருத்துவர் V.P.கார்த்திகேயன் தலைமையிலான பணியாளர்கள் செய்திருந்தனர். இந்த நிகழ்வில் கல்லூரி மாணவ – மாணவிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.