மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு
திருச்சி, ஆக. 8 திருச்சி மாவட்டம் முசிறி அருகே நாச்சாப்புத்தூர் கருங்காடு பகுதியைச் சேர்ந்த முத்துகுமார் ( 23). இவர் தனியார் (கொங்குநாடு பொறியியல்) கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் அருகே தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது அருகே இருந்த மின்கம்பத்தில் சாய்ந்துள்ளார். அப்போது மின் கம்பத்திலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டுள்ளார்.. சம்பவம் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஒரு மணி நேரம் வராததால் தனியார் காரில் முசிறிக்கு அழைத்து வந்துள்ளனர். முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த போது வரும் வழியிலே மாணவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாச்சாப்புத்தூர் கருங்காடு பகுதியில் மின்வாரியம் சரியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாததால் அடிக்கடி மின்விபத்து ஏற்படுவதாகவும், மேலும் சாலை வசதி, அவசர காலத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் இதுபோல் விபத்துக்கள் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இச்சம்பவம் குறித்து தொட்டியம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.