துறையூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பெண்கள் சாலை மறியல்
திருச்சி, செப். 2திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள அபிநமங்கலம் ஊராட்சி எம்.ஜி.ஆர். நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 9 மாதங்களுக்கும் மேலாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், குறிப்பாக பெண்கள், காலிக்குடங்களுடன் அபிநமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலக முன்பு புத்தனம்பட்டி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோகிலா, புலிவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.