பிரபல ஓட்டலில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு : விற்பனைக்கு தடை
திருச்சி, ஆக. 10 உணவு தயாரிக்கும் கூடம் சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்டு வந்த பிரபல ஓட்டலில் உணவு விற்பனைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மேலரண் சாலையில் உள்ள பிரல தனியார் ஓட்டலில் உணவு உற்பத்தி கூடம் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக உணவுப் பாதுகாப்புத்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து திருச்சி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்..ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுஆய்வு பிரபல ஓட்டலில் நேற்று ஆய்வுமேற்கொண்டார். அப்போது உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்கள் மிகவும் அசுத்தமாகவும் கழிவுநீர் தொட்டியில் இருந்து நோய் தொற்று ஏற்படும் வண்ணம் இருந்தது கண்டறியப்பட்டு. இதையடுத்து அந்த உணவகத்தின் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு பராமரிப்பு பணிகளுக்காக மட்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், உணவு பாதுகாப்பு துறையால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்த பின்னர் மறு ஆய்வு செய்யப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதாரமற்று நடத்தப்பட்டு வந்த இந்த உணவகத்திற்கு உணவு பாதுகாப்பு துறை பிரிவு 56-இன் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற முறையில் உணவகம் இருந்தாலோ பாதுகாப்பற்ற உணவு விற்பனை செய்தாலோ உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இதுபோன்ற தங்கள் பகுதிகளுக்கு அருகில் ஏதேனும், உணவகம் இருந்தால் 99449 – 59596 என்ற எண்ணில் புகார் அளிக்க வேண்டும் என்றும், தகவல் அளிப்பவரின் விபரங்கள் இரகசியம் காக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ஆர்.ரமேஷ்பாபு தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின் போது பாண்டி செல்வராஜ் கந்தவேல் ஆகியோர் உடனிருந்தனர்.