திருப்பைஞ்ஞீலீ ஈச்சம்பட்டி மாரியம்மன் கோயிலில் திருவிழா

0 450
Stalin trichy visit

திருச்சி செப் 17 திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் திருப்பைஞ்ஞீலீ அருகே ஈச்சம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து தீ மிதித்து கிடா வெட்டி அம்மனை வழிபட்டனர்.

மண்ணச்சநல்லூர் அடுத்த திருப்பைஞ்ஞீலீ ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு ஈச்சம்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னதாக மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி  பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாள்தோறும் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், ஜவ்வாது, தேன், பன்னீர், இளநீர், குங்குமம், திருநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகங்களும் சந்தன அலங்காரமும்,சிறப்பு ஆராதனைகளும் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை உற்சவ அம்மனுக்கு பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆலயத்தில் இருந்து புறப்பட்டு புனித நீராடிய பக்தர்களை ஆலயத்திற்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையடுத்து காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் 150 க்கும் மேற்பட்டோர் கொள்ளிடம் ஆற்றில் புனித நீராடி அங்கிருந்து அக்கினி சட்டி ,பால்குடம்,தீர்த்த குடம் எடுத்து ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தீ குண்டத்தில் ஒருவருக்கு ஒருவர்‍ பின் இறங்கி தீ மிதித்தனர். இதையடுத்து நேற்று 50க்கும் மேற்பட்ட கிடா வெட்டி அம்மனை வழிபட்டனர்.

இதில் சுற்று வட்டார பகுதிகளிருந்து 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் தியாகராஜன், கிராம பட்டையதாரர்கள் மற்றும் ஆலயத்தின் விழா குழுவினர் , பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.