புதிய நேர்த்தியான நெல் வகை சாகுபடி நுட்பங்கள் விவசாயிகள் பயிற்சி
திருச்சி, செப். 21 திருச்சி மாவட்டம், துறையூர் வட்டாரம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமமான விசாலாட்சி அம்மாள் சமுத்திரம் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை. முகமையின் சார்பாக புதிய சன்னரக நெல் உற்பத்தி பற்றிய பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியானது ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. வசந்தாதேவி கணேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பயிற்சியில் துறையூர் வேளாண்மை உதவி இயக்குநர் திரு. ரவி அவர்கள் முன்னிலை வகித்து மாண்புமிகு முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், மண், நீர் மாதிரிஆய்வு செய்து, உர மேலாண்மைசெய்திடல்,
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பண்ணை காடுகள் பசுமைபோர்வை திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படும் வேம்பு மரக்கன்றுகள் மற்றும் அதற்கு வளர்ப்பிற் க்கான மானியம், மானியத்தில் வழங்கப்படும் உயிர் உரங்கள், ஜிப்சம், நுண்ணூட்ட சத்துக்கள், பற்றி விளக்கம் கூறி பயிற்சி அளித்தார். மேலும் உளுந்து, மக்காச்சோளம், சிறுதானியங்கள், துவரை, நிலக்கடலை சாகுபடி துண்டு பிரசுரங்களை விவசாயிகளுக்கு வழங்கி விளக்கம் அளித்தார். பயிற்சியில் பேசிய சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தின் பயிர் பெருக்கவியல் துறை இணை பேராசிரியர் முனைவர் திருமதி. சகிலா அவர்கள் புதிய மிக நேர்த்தியான, அதிக மகசூல் தரவல்ல கோ-55, கிள்ளிகுளம் -1,அம்மன் பொன்னி மற்றும் நறுமண நெல் வகையான கோ 58 ஆகிய ரகங்களின் சிறப்பு அதன் சாகுபடி உத்திகள், மகசூல், அரிசியை உணவாக எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள், சாகுபடி செய்யும் பயிர்களில் ஓரப்பயிராக அல்லது வரப்பு பயிராக உளுந்து, தட்டைப்பயறு ஆகியவற்றில் பயிருக்கு ஏற்ற வகையில் பயிரிடவும், உயிர்ம/அங்கக வேளாண்மை, ஒருங்கிணைந்த பண்ணையம், பருத்தி சாகுபடியில் கலப்பு பயிராக உளுந்தையும், துவரையையும் சாகுபடி செய்தும், பருத்தியின் 35 முதல் 45 வது நாளில் நுனிக்கிள்ளு தல் செய்து பக்க கிளைகள் அதிகமாக வருவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம் எனவும், பாரம்பரிய நெல் ரகங்களான கருப்பு கவுனி, சிவப்பு கவுனி, சிவன் சம்பா, சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கள்ளிமடையான், குதிரைவால் சம்பா ஆகியவற்றை குறைந்த இடுபொருட்கள் செலவில் இயற்கையாக சாகுபடி செய்யலாம் என கூறி பயிற்சி அளித்தார். உதவி தொழில்நுட்ப மேலாளர் திரு. சரவணன் உழவன் செயலி மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் பல்வேறு வகையான 21 சேவைகள், தமிழ் மண் வளம் பற்றி விளக்கம் அளித்து செயலியை பதிவிறக்கம் செய்து காண்பித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் திரு. இரா. அன்பழகன் பருத்தி மற்றும் மக்காச்சோள சாகுபடியில் கடைபிடிக்க வேண்டிய வேப்பம் புண்ணாக்கு இ டுதல், விதை நேர்த்தி செய்தல், மெட் டாரைசியம், சூடோமோனாஸ், ட்ரைகோ டர்மா விரிடி ஆகியவற்றை கடைசி உழ வில் இடுதல் பற்றி பயிற்சி அளித்தார். உதவி வேளாண்மை அலுவலர் திருமதி. கௌசல்யா அவர்கள் நுண்ணீர் பாசனம் வழங்க அரசு வழங்கும் முழு மானியங்கள், விரிவாக்கம் மையத்தில் உள்ள இடுபொருட்கள் பற்றி விளக்கம் அளித்தார். பயிற்சியில் உதவித் தொழில்நுட்ப மேலாளர் சரண்யா நன்றியுரை கூறினார். பயிற்சியில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, தக்கை பூண்டு வயல், மக்காச்சோள வயல் ஆகியவற்றை நேரிடையாக பார்த்து பயன்பெற்றனர்.