லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை
திருச்சி, ஏப்.29 திருட்டு சம்மந்தமான புகாரின் மேல் வழக்கு பதிவு செய்ய ரூ.1,500/- லஞ்சம் கேட்டுப்பெற்ற வழக்கில், திருச்சி மாநகர முன்னாள் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.20,000/- அபராதம் விதித்து திருச்சி விஜிலென்ஸ் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுக்கா, T.களத்தூரைச் சேர்ந்தமணிமாறன் (வயது- 61) என்பவர் திருச்சி சிங்காரதோப்பில் உள்ள MRI காம்ப்ளக்ஸில் தையல்கடை நடத்தி வந்துள்ளார். மணிமாறன் உடல்நிலை சரியில்லாமல் கடையை பூட்டிவிட்டு சொந்த ஊரில் இருந்தபோது தையல் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திருட்டு நடந்துள்ளது.
இது தொடர்பாக கடந்த 21.07.2009ம் தேதி திருச்சி மாநகரம், கோட்டை குற்ற பிரிவு காவல் நிலையம் சென்று அங்கு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துகுமார் என்பரிடம் புகார்மனு கொடுத்துள்ளார். புகாரை வாங்கிக்கொண்டு ஒரு வாரம் கழித்து வரசொன்னதன்பேரில், புகார்தாரர் மணிமாறன் கடந்த 30.07.2009 ம்தேதி கோட்டை குற்றபிரிவு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துகுமாரை சந்தித்து தனது புகார் பற்றி கேட்டுள்ளார். அப்போது சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துகுமார், புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து நடவடிக்கை எடுக்க, மணிமாறனிடம் ரூ.1,500/- லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத மணிமாறன் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கடந்த 31.07.2009ந்தேதி கொடுத்த புகாரின்பேரில் திருச்சி ஊ.த.க பிரிவில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 01.08.2009ந் தேதி மேற்கொண்ட பொறிவைப்பு நடவடிக்கையில், புகார்தாரர்மணிமாறனிடம் ரசாயண பவுடர் தடவப்பட்ட லஞ்சப்பணம் ரூ.1,500/- கொடுத்து கோட்டை குற்ற பிரிவு காவல்நிலையத்திற்கு அனுப்பிவைத்தபோது, சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துகுமார் புகார்தாரர் மணிமாறனிடம் மேற்படி ரசாயணம் தடவப்பட்ட லஞ்சப்பணம் ரூ.1,500/- கேட்டு பெற்ற போது எதிரி திரு.முத்துகுமார் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலிசாரால் கைது செய்யப்பட்டார்.
மேற்படி வழக்கானது திருச்சி, ஊழல் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் விசாரணை முடிவுற்று இன்று 29.04.2026 ந்தேதி திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி புவியரசு , திருச்சி கோட்டை குற்றபிரிவு காவல்நிலையம், முன்னாள் சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துகுமார்,என்பவருக்கு புகார்தாரர் மணிமாறன் கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்ய கையூட்டு கேட்ட குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 3 மாதம் மெய்காவல் சிறை தண்டனையும், சட்டப்படியான தனது கடமையை செய்வதற்கு கையூட்டு கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்ததோடு, மேற்கண்ட தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்குமாறும் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
மேற்படி வழக்கினை DSP .மணிகண்டன் திறம்பட சாட்சிகளை ஆஜர் செய்து ஒத்துழைப்பு வழங்கியும், அரசு தரப்பு வழக்கறிஞராக திரு.கோபிகண்ணன் அவர்கள் திறம்பட வழக்கை நடத்தியும் குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்துள்ளார்கள்.