உடலை அடக்கம் செய்யும் இடத்தில் தேங்கிய மழைநீர்: உறவினர்கள் சாலை மறியல்
திருச்சி, நவ.12 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தீராம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பாயி (வயது 84) இவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் நேற்று மாலை அவரது உடலை அடக்கம் செய்ய நொச்சிமேடு பகுதியில் உடலை அடக்கம் செய்யும் மாயானத்திற்கு சென்று போது அங்கு முழுவதுமாக மழைநீர் தேங்கி நின்றது. இதனால் குழி வெட்டி உடலை அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் இறந்த மூதாட்டியின் உறவினர்கள் உடலை எடுத்து வந்து அடக்கம் செய்ய முடியாத நிலையில் நொச்சிமேடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வந்து மண் கொட்டி அந்த இடத்தை சரிசெய்த நிலையில் மக்கள் மறியலை கைவிட்டனர். அதன் பின்னர் குழி தோண்டி மூதாட்டி உடல் அடக்கம் செய்யப்பட்டது.