மணப்பாறையில் தெருநாய்களை கட்டுப்படுத்தக் கோரி நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம்
திருச்சி, ஜன.13 திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றிக் கொண்டு திரிகின்றது. மக்கள் கூடும் இடங்கள், சாலைகளிலும் அதிக அளவில் நாய்கள் சுற்றி வரும் நிலையில் நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வந்த போதும் அதைப்பற்றி அதிகாரிகள் யாரும் கவனத்தில் கூட கொள்ளவில்லை.
நாய்களை கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காத நிலையில் தான் நகராட்சி அலுவலக வளாகப்பகுதியில் கூட 15 க்கும் மேற்பட்ட நாய்கள் நகராட்சிக்கு வரும் மக்களை விரட்டும் சம்பவம் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றது.
நேற்று இரவு முதல் இன்று காலை வரை மட்டும் பஸ் நிலைய பகுதிகளை சுற்றி 15 பேர் நாய்க் கடித்துபாதிப்புக்கு ஆளாகி மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று ராமலிங்கம் தெருவைச் சேர்ந்த நாகராஜ் என்பவரை நாய் காலில் கடித்து விட்டதால் ரத்தம் பீறிட்டு வெளியேறியது. மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதனையடுத்து நகராட்சி நிர்வாகம் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தக்கோரி நகராட்சி அலுவலக நுழைவாயில் முன்பு தரையில் படுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் எந்த வித நடவடிக்கையும் இல்லாததால் தான் பாதிப்புக்கு ஆளாகி உள்ளேன் என்று கூறினார். நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு எழுந்து சென்றார்.
கடந்த மாதம் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு சுமார் 270 க்கும் மேற்பட்டோர் பேர் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர். இந்த பாதிப்பு என்பது மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றனர்கள் மட்டும் தான். இதுமட்டுமின்றி நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அருகில் உள்ள பல்வேறு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றுச் சென்று கொண்டு தான் இருக்கின்றனர். இப்படியாக நாய்க்கடியால் மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வருவது ஒருபுறம் என்றாலும் நாய் கூட்டம் சாலைகளில் சுற்றித் திரிவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பும், உடல் உறுப்புக்களை இழந்தவர்களும் அதிகம் உள்ளது. நாய்க்கடிக்கு மக்கள் ஆளாகி அவதிப்பட்டு வரும் சூழலில் நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.