திருச்சியில் முதல்வர் மருந்தகங்கள் காணொளி காட்சி மூலம் திறப்பு

0 514
Stalin trichy visit

திருச்சி, பிப். 24 திருச்சியில் 38 முதல்வர் மருந்தகம் காணொளி மூலம் முதல்வர் திறந்து வைத்தார் – திருச்சியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர், மேயர் பங்கேற்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2024-ம் ஆண்டு ஆக.15-ம் தேதி சுதந்திர தினவிழா உரையில், ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதல்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் தமிழகம் முழுவதும் தொடங்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி, தமிழகம் முழுவதும் பி.பார்ம், டி.பார்ம் படித்தவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதல் பெற்றவர்கள் முதல்வர் மருந்தகம் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்டு உரிமங்கள் வழங்கப்பட்டது. அதன்படி கூட்டுறவு சங்கத்தின் மூலம் 500 மருந்தகங்களும் தொழில் முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் என மொத்தம் ஆயிரம் மருந்தகங்கள் திறக்கப்படுகிறது. திருச்சியில்
38இடங்களிலும், சென்னையில் 33, மதுரையில் 52, கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40 என முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான மருந்துகள் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் கொள்முதல் செய்யப்படும். தேவை ஏற்பட்டால் வெளிச்சந்தையிலும் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. தமிழ்நாட்டில் முதல்வர் மருந்தகம் திறக்கும் தொழில் முனைவோருக்கு 3லட்சம் ரூபாய் வரை அரசு மானியமாக வழங்குகிறது. இதில் 50சதவீத தொகையானது ரொக்கமாகவும் மீதமுள்ள 50 சதவீதம் மருந்துகள் வடிவத்திலும் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் 1000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு விழா இன்று காலை நடக்கிறது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மருந்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த மருந்தகங்களில் வெளி மார்க்கெட் விலையை விட 25 % தள்ளுபடி விலையில் மருந்துகளை வாங்கி பொதுமக்கள் பயனடையலாம். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஆயிரம் மருந்தகம் துவக்கி வைத்தார் இதன் ஒரு பகுதியாக திருச்சி கே.கே.நகர் மெயின் ரோடு மங்கம்மா சாலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் புதிய முதல்வர் மருந்தகத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். திருச்சி மாவட்டத்தில் கேகே நகர் காட்டூர் உறையூர் மணப்பாறை திருவரம்பூர் ஸ்ரீரங்கம் உட்பட 38இடங்களில் முதல்வர் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,    தற்போது திருச்சி மாவட்டத்தில் 38 இடங்களில் முதல்வர் மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது.  75% குறைந்து விலையில் மருந்துகள் விற்கப்படுகிறது.  240 ரூபாய்க்கு விற்கப்படுகிற மருந்து 16 ரூபாய் முதல் 14 ரூபாய் வரை கிடைக்கிறது என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் சரவணன், திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அருள், திருச்சி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கயின் இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குநர் அரசு, அமராவதி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை இணைப்பதிவாளர் திருப்பதி, சரக துணை பதிவாளர் முத்தமிழ்ச்செல்வி, திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தில் கூட்டுறவு சார்பதிவாளர், செயலாட்சியர் செந்தில்குமார், 4வது மண்டல தலைவர் துர்காதேவி, மாமன்ற உறுப்பினர் கவிதா செல்வம், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.