வடமாடு ஜல்லிக்கட்டு : சீறிபாய்ந்த காளைகள்
திருச்சி, பிப். 24 மணப்பாறையில் வடமாடு மஞ்சுவிரட்டில் களத்தில் நின்று விளையாடி அசர வைத்த காளைகள். காளைகளுடன் 20 நிமிடம் மல்லுக்கட்டிய வீரர்கள்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பெஸ்டோநகரில் வேப்பிலை சாயிபாபா கோவில் குழுவினர் மற்றும் இளையநிலா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 8ம் ஆண்டு வடமாடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது.
இதில் திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 13 காளைகள் பங்கேற்றது. போட்டியில் காளைகளை அடக்க ஒரு குழுவில் 9 பேர் வீதம் 13 குழுக்களாக வீரர்கள் களமிறங்கினர். இதைத் தொடர்ந்து வடகயிற்றில் கட்டப்பட்டிருக்கும் காளை அவிழ்த்து விடப்பட்டது. ஒரு காளையை 20 நிமிடத்தில் அடக்க வேண்டும் என்பதுவிதி. காளைகள் அவிழ்த்து விடப்பட்டதும் அதை அடக்க வீரர்கள் ஆர்வத்துடன் போராடினர். இருப்பினும் தன்னை அடக்க வந்த வீரர்களை நெருங்க விடாமல் சில காளைகள் வீரர்களை பந்தாடி வெற்றி பெற்றது. ஆக்ரோசம் காட்டி அடங்க மறுத்த காளைகளையும் பார்வையாளர்கள் ஆரவாரத்திற்கிடையே வீரர்கள் போராடி கடைசி நிமிடத்தில் அடக்கி களத்தை பரபரப்பாக்கினர். சில காளைகளை வீரர்கள் போட்டி துவங்கிய பத்து நிமிடங்களுக்குள்ளாகவே அடக்கியும் வெற்றி பெற்றனர்.
இதில் வெற்றி பெற்ற காளைக்கும், வீரர்களுக்கும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.