பைக் மீது மரம் முறிந்து விழுந்ததில் கணவன் மனைவி உயிரிழப்பு

0 401
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 3  திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அருகே வள்ளலார் நகரில் உள்ள திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த கணவன் மனைவி மீது சாலையோரம் இருந்த மரம் முறிந்து விழுந்ததில் கணவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மனைவியும் பலியானார். மோட்டார் பைக் தீப்பற்றி எரிந்து சாம்பலானது.

ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சுதர்சன்(38).இவரது மனைவி புனிதா (32).இந்த தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தையும்,7 மாத ஆண் குழந்தையும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தம்பதி லால்குடி பகுதியில் சொந்தமாக வீடுகட்டி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் பைக்கில் லால்குடியிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது வள்ளலார் நகர் அருகில் திருச்சி  – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த மரம் திடீரென முறிந்து தம்பதி சென்ற மோட்டார் பைக் மீது விழுந்தது.
மரத்தின் அடியில் சிக்கிய தம்பதியினர் படுகாயமடைந்ததில் அக்கம் பக்கத்தினர் மரக்கிளைகளை அகற்றியபோது கணவர் சுதர்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மனைவி புனிதாவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக பலியானார்.

இந்த விபத்தில் மோட்டார் பைக் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த மோட்டார் பைக்கை தண்ணீர் பீச்சு அணைத்தனர்.ஆனாலும் மோட்டார் பைக் எரிந்து சாம்பலானது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான கணவன்,மனைவி உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தினால் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சாலையில் சென்ற தம்பதி மீது மரம் முறிந்து விழுந்ததில் இருவரும் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.