முசிறி அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் தொழிலாளர்கள் 11 பேர் காயம்
திருச்சி, டிச.26 திருச்சி மாவட்டம், முசிறி அருகே சீத்தப்பட்டி பகுதியில் உள்ள வயல்களில் மரவள்ளி கிழங்கு வெட்டி எடுத்து லாரியில் கொண்டு செல்வதற்காக கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியை சேர்ந்த 11 பேர் லாரியில் புறப்பட்டு நேற்று காலை வந்துள்ளனர். அப்போது வயல்களில் இருந்து மரவள்ளிக் கிழங்குகளை வெட்டி எடுத்து லாரியில் லோடு ஏற்றியுள்ளனர்.
பின்னர் தொழிலாளர்கள் அனைவரும் கிழங்குலோடு மீது அமர்ந்து சென்றுள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள தனியார் மில்லில் மரவள்ளி கிழங்குகளை இறக்குவதற்காக லாரியை அஜித் (26) என்பவர் ஓட்டி சென்றபோது நேற்று மாலை காட்டுப்புத்தூர் அருகே கணபதிபாளையம் – சீத்தப்பட்டி சாலையில் சென்ற லாரி வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இதில் லாரி மீது அமர்ந்து வந்த கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த பிரசாந்த் (27), அன்புகுமார் (45), கோவிந்தராஜ் (43), அமலா (35), நாகப்பன் (57), ரித்திஷ்கா (9), ஏழுமலை (54), ஏகவள்ளி (54), டேனியல் (27), சின்னதுரை (21) ஆகியோர் காயம் அடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் காயம் அடைந்தவர்களை காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு ஏகவள்ளி, டேனியல், சின்னதுரை ஆகிய 3 பேர் அழைத்து செல்லப்பட்டனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த காட்டுப்புத்தூர் இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.