இனாம்குளத்தூர் பகுதியில் தடையில்லா மின்விநியோகம்: துரை வைகோ எம்.பி. உறுதி

0 256
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 4 திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மறுமலர்ச்சி தி.மு.க. முதன்மைச் செயலாளருமான துரை வைகோ தெரிவித்திருப்பதாவது,

திருச்சி நாடாளுமன்றத் தொகுதி, சிறீரங்கம் வட்டம், மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள இனாம்குளத்தூர் பகுதி மக்களின் நலன் கருதி, எனது கோரிக்கையை ஏற்று, பழையபடி இரயில் தண்டவாளத்தின் கீழ் கேபிள் மூலம் மின்விநியோகம் வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பு கிடைத்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு கஜா புயலின் பாதிப்பால், இனாம்குளத்தூருக்கு ரயில் தண்டவாளத்தின் கீழ் கேபிள் மூலம் வழங்கப்பட்டு வந்த மின்விநியோகம் தடைபட்டது. அதன்பின், தற்காலிகமாக புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு, அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த ஏழு ஆண்டுகளாக, மக்கள் பலமுறை கோரிக்கை வைத்து, அவை நிறைவேற்றப்படுவதற்காக காத்திருந்தனர்.

இந்நிலையில், 04.01.2025 அன்று ரயில்வே மேம்பாலக் கோரிக்கைக்காக இடத்தை ஆய்வு செய்யச் சென்றபோது, இனாம்குளத்தூர் விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை மனு அளித்தனர். அம்மாபேட்டை துணை மின்நிலையத்திலிருந்து ரயில்வே கேட் அருகிலுள்ள பகுதிகளுக்கு முன்பு ரயில் தண்டவாளத்தின் கீழ் கேபிள் மூலம் மின்விநியோகம் வழங்கப்பட்டு வந்ததைச் சுட்டிக்காட்டி, மீண்டும் அதே முறையில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரினர். இக்கோரிக்கையை வலியுறுத்தி, மின்வாரிய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்து, மாவட்டக் கழகச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் மூலம் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வந்தேன்.

பலகட்ட ஆய்வுகள் மற்றும் ஆலோசனைக்கு பின், பொதுமக்களின் நலன் கருதி, எனது கோரிக்கையை ஏற்று, ரயில் தண்டவாளத்தின் கீழ் கேபிள் மூலம் மின்சாரம் வழங்குவதற்காக, நேற்று (ஜூன்3) அறிவிக்கப்பட்டு இதற்காக ரூ.24,92,270/- ஒதுக்கீடு செய்து, திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் ஆணை பிறப்பித்துள்ளார். கூடிய விரைவில் உரிய அனுமதிகள் பெறப்பட்டு, பணிகள் தொடங்கப்படும். இதன்மூலம், இனாம்குளத்தூர் மக்களுக்கு தடையில்லா மின்விநியோகம் உறுதி செய்யப்படும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறேன்.

இதனால், இனாம்குளத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட ரஹமத்நகர், அண்ணா நகர், ராஜகாட்டுப்பட்டி, சின்ன ஆலம்பட்டி, புதுக்குளம், கீழப்பட்டி, ஜோதி விநாயகர் கோயில் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயன்பெறுவதோடு. அப்பகுதியிலுள்ள உயிர் காக்கும் மருத்துவமனை, அரசு மேல்நிலைப்பள்ளி, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆகிய மிக முக்கிய பயன்பாட்டிற்கும் இந்த தடையில்லா மின்சாரம் பயன்படும். இப்பணி முழுமையாக நிறைவடையும் வரை எனது கவனம் இதன் மீது இருக்கும் என்று உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.