மொழி குறித்து கமல் பேசியதில் எந்த தவறும் இல்லை : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
திருச்சி, ஜூன் 4 திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் செயல்படும் மாநகராட்சி உயர்நிலை பள்ளிக்கு எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரில் புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ரூ.18.41 கோடி செலவில் பிரம்மாண்டமாக பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அந்த பள்ளி கட்டிடத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் இன்று திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா, மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பள்ளி திறப்பு விழா நிகழ்ச்சியில் பெரம்பலூர் எம்பி அருண் நேரு பேசுகையில்,
கடந்த 10 ஆண்டு காலமாக தமிழகத்திற்கு எதிராக எவ்வளவோ சக்திகள் வந்து தமிழகத்திற்கு மீதான பொறாமையை தீர்க்க பல முயற்சிகள் செய்கிறார்கள். வடக்கிலிருந்து கத்தும் அவர்களுக்கு நாம் திரும்ப கத்த வேண்டிய தேவை இல்லை நாம் அறிவினால் பதில் சொல்ல வேண்டும் என முதல்வர் செயல்படுகிறார். கல்விக்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார் என்று கூறினார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசும் போது,
தமிழ்நாட்டிற்கு எடுத்துக்காட்டாக இந்த பள்ளி கட்டிடம் உள்ளது. சமூக வலைத்தளங்களில் தனியார் பள்ளியா? கல்லூரியா எனும் அளவிற்கு இந்த பள்ளியை குறித்த பகிர்தல் அதிகமாக இருந்தது. கழகத்தையும் பொதுவாழ்வையும் தனது இரு கண்களாக பார்ப்பவர் அமைச்சர் நேரு என்பதற்கு சாட்சியாக இந்த பள்ளி உள்ளது.
மக்கள் நம்பிக்கை வைத்தால் சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, நாடாளுமன்ற உறுப்பினராக வரமுடியும். அந்த பொறுப்புகள் வரும் போகும். ஆனால் வாழ்நாள் முழுவதும் நம் உடன் வருவது நாம் கற்ற கல்விதான் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பிற பிள்ளைகளுடன் ஒப்பிட கூடாது. ஒவ்வொய் பிள்ளைகளின் திறமையை கண்டறிந்து அவர்களுடைய திறமையை வளர்க்க வேண்டியது பெற்றோர், ஆசிரியர்களின் கூட்டுப் பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். உயர்நிலைப் பள்ளியாக இருக்கக்கூடிய இந்த பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.
அமைச்சர் தன்னுடைய உரையின் தொடக்கத்தில், இந்த பள்ளி அமைந்துள்ள 57 வது வார்டின் கவுன்சிலர் முத்து செல்வம், என்னுடைய சிறு வயதில் என்னை அவருடைய டி.வி.எஸ் 50 வண்டியில் டியூசன் அழைத்து சென்றார். இன்று அவர் கவுன்சிலராக இருக்கும் பகுதியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பள்ளி திறப்பு விழா நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்றுள்ளோம் என்பது மகிழ்ச்சியாக உள்ளது என தன்னுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது,
மேற்கு தொகுதியில் அரசு பள்ளிகளே இல்லை, மாநகராட்சி பள்ளி தான் உள்ளது. எனவே தமிழக முதல்வரை அழைத்து வந்து திருவெறும்பூர் தொகுதியில் மாதிரி பள்ளியை திறந்ததைப் போன்று மேற்கு தொகுதியிலும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு பள்ளியை திறக்க வேண்டும். திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரான அமைச்சர் அன்பில் மகேஷ் முதலில் நமக்கு பார்த்துவிட்டு தான் மற்றவருக்கு செய்ய வேண்டும் என்பதை நன்றாக செய்துள்ளீர்கள்… அப்பள்ளி சிறப்பாக நவீன தொழில்நுட்பத்துடன் உள்ளது. அதைப்போலவே மேற்கு தொகுதியிலும் செய்ய வேண்டும்.
திருச்சி மேற்கு தொகுதி அமைச்சர் மகேஷின் தாத்தா, அப்பா, சித்தப்பா என அனைவரும் நின்ற தொகுதி. எனவே இந்த தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் செய்ய வேண்டிய பொறுப்பு உண்டு அதை அவர் செய்ய வேண்டும்.
திமுக ஆட்சியில் தான் திருச்சி மாவட்டம் பல்வேறு வளர்ச்சிகளை பெற்றுள்ளது.
மாநகராட்சி சார்பில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சி கல்லூரி தொடங்கப்படும். உறையூரிலும் இதே போன்ற பள்ளி தொடங்கப்படும். மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் உலகில் உள்ள தமிழகத்தை சேர்ந்த தலைசிறந்த நிபுணர்கள் எல்லோரும் அரசு பள்ளியில் பயின்றவர்கள் தான் அதை அனைவரும் உணர்ந்து நல்ல முறையில் படிக்க வேண்டும் என்றார்.இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு தேவையான சீருடைகள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே என் நேரு,
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்க நகராட்சி நிர்வாக துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது முதலமைச்சர் அனைத்து துறை அமைச்சர்கள் அதிகாரிகளையும் அழைத்து இது குறித்து பேசி உள்ளார். ஜூன் 12ஆம் தேதி மேட்டூரில் தண்ணீர் திறந்த பின்பு கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் அந்த துறை சார்பில் எடுக்கப்பட்ட உள்ளது. மொழி குறித்து கமல் பேசியதில் எந்த தவறும் இல்லை தமிழ் மொழியில் இருந்து தான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகள் வந்தது அதனால் அவர் பேசியது சரிதான். திமுக அரசு மீது எந்த குறையும் கூற முடியாததால் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தீர்ப்பு வந்த பின்பும் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திமுக அரசு மீது குறை கூறுகிறார் என்றார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போது பரவும் கொரோனா வீரியம் இல்லாத கொரோனா எனவும் இதனால் எந்த பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தொடர்பாக தேவை ஏற்பட்டால் பள்ளி மாணவர்கள் முக கவச அணிய அறிவுறுத்தப்படுவார்கள் என்றார்.