மணப்பாறை அருகே வாலிபர்கள் – போலீசார் இடையே மோதல்
திருச்சி, ஆக.4 மணப்பாறை அருகே வாலிபர்கள் – போலீசார் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட திமுக கட்சியினர் – பொதுமக்கள்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புதுகாலணி அருகே மணப்பாறை – கோவில்பட்டி சாலையில் உசிலம்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்ற வாலிபருக்கும் சாதாரண உடையில் இருந்த மாவட்ட எஸ்பியின் தனிப்பிரிவு எஸ்ஐ பாலமுருகன், காவலர் ஜெகன் ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டு அவரை தனிப்பிரிவு போலீசார் தாக்கியதாக கூறப்படுகின்றது.
இதுகுறித்து அந்த வழியாக வந்த சின்னதுரை என்பவர் கேட்க அவர் மீதும் தாக்குதல் நடத்திய நிலையில் இருவர் மீதும் தாக்குதல் நடத்தியதை அவ்வழியாக வந்த மணப்பாறை தி.மு.க ஒன்றியச் செயலாளர் ராமசாமி வாலிபர்களை தாக்கியது குறித்து கேட்ட போது அவரின் சட்டையை பிடித்து கீழே தள்ளி விட்டு தரக்குறைவாக பேசியவதாக கூறப்படுகின்றது. இதனால் அங்கு திரண்ட மக்கள் தனிப்பிரிவு போலீசாரை தாக்கியதாக கூறப்படுகின்றது. இருதரப்பும் தாக்கிக் கொண்ட நிலையில் போலீசார் தாக்கியதில் காயமடைந்த ராஜேஷ்கண்ணன், சின்னத்துரை மற்றும் பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த தனிப்படை எஸ்ஐ பாலமுருகன், காவலர் ஜெகன் ஆகிய நான்கு பேரும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின் மேல் சிகிச்சைக்காக சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஜெகன் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் தேவையில்லாமல் தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி மணப்பாறை தி.மு.க ஒன்றியச் செயலாளர் ராமசாமி மணப்பாறை போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையில் சம்பவம் பற்றி தகவல் அறிந்த தி.மு.க வினர் மற்றும் பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சம்மந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் தனிப்படை போலீசார் உசிலம்பட்டி பகுதியில் குட்கா விற்பனை குறித்து நடத்திய விசாரணையின்போது தான் ராஜேஷ் கண்ணனுடன் தகராறு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மணப்பாறையில் பரபரப்பு ஏற்பட்டது.