மணப்பாறை அருகே குடும்பத்தையே கட்டி போட்டு பணம், நகை கொள்ளை
திருச்சி, ஆக.7 மணப்பாறை அருகே கணவன் மனைவி குழந்தைகளை கட்டிப்போட்டு கத்தியைக்காட்டி மிரட்டி ரூ.1 லட்சம் பணம், 10 சவரன் நகையை கொள்ளையடித்த மர்ம கும்பல்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மணியங்குறிச்சி களத்து வீட்டில் வசிப்பவர் அமர்ஜோதி (வயது 53) விவசாயி .நேற்று இரவு 10 மணி அளவில் வீட்டில் படுக்க சென்ற நிலையில் வீட்டின் அருகே உள்ள வாழைத் தோட்டம் வழியாக மங்கி குல்லா, கையுறை அணிந்தும் சிறிய கத்தி, வால் மற்றும் உருட்டுக்கட்டையுடன் வந்த மர்ம நபர்கள் சுமார் 5 பேர் வெளியில் படுத்திருந்த அமர்ஜோதியை தாக்கி வீட்டிற்க்குள் சென்று வீட்டில் இருந்த அவரது மனைவி பிச்சையம்மாள் (வயது 45), மகள் லேகா ஸ்ரீ (வயது 16) மகன் அருணகிரி (வயது 15) ஆகியோரை தோட்டத்திற்கு பயன்படுத்தும் வலையை வைத்து கட்டிப் போட்டும் சத்தம் போடாமல் இருக்க வாயில் டேப்பை ஒட்டியும் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர்.
மேலும் பிச்சையம்மாள் கழுத்தில் கத்தியை வைத்து நகை பணம் எங்குள்ளது என்று கேட்டு மகள் லேகாஸ்ரீயை மிரட்டி வீட்டில் ஆங்காங்கே இருந்த ரூ. 1 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 சவரன் நகை ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளனர். அப்போது வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட்டிஸ்கையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த புத்தாநத்தம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடையங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு குடும்பத்தையே கட்டி போட்டு கத்தியைக்காட்டி நகை, பணம் திருடியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.