துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளி தலைமையாசிரியர் பணியிட மாற்றம்

0 350
Stalin trichy visit

திருச்சி, ஆக.14 திருச்சி துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளி தலைமையாசிரியர் அரசங்குடி உயர்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திற்குள் அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது.  உண்டு உறைவிடப் பள்ளியாக செயல்பட்டு வரும் இந்தப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு 2 வரை உள்ளது. இங்கு, திருச்சி மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 576 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்பள்ளியில் பிளஸ் 2 படித்துக்கொண்டு கிளாட் தேர்வுக்கு தயாராகி வந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த ஜூன் மாதம் விடுதி அறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதேபோல, கிளாட் தேர்வுக்கு தயாராகி வந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேறொரு பிளஸ் 2 மாணவரும் விடுதி அறையிலேயே கடந்த மாதம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

முதல்வரால் திறந்துவைக்கப்பட்ட அரசு மாதிரிப் பள்ளியில் அடுத்தடுத்து மாணவர்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர்களின் தற்கொலைக்கு மன உளைச்சலே காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டது.  இப்பள்ளியின் முதல்வராக அந்தோணி லூயிஸ் மத்தியாஸ் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அரசு மாதிரிப் பள்ளி முதல்வர் அந்தோணி லூயிஸ் மத்தியாஸ் திருவெறும்பூர் அருகே உள்ள அரசங்குடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, அரங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்த அகிலன், துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளி தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்றே அரசு மாதிரிப் பள்ளி தலைமையாசிரியராக அகிலன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அரசுப் பள்ளியில் அடுத்தடுத்து நடைபெற்ற மாணவர்களின் தற்கொலைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, இங்கு பணியாற்றி வந்த தலைமையாசிரியர் அந்தோணி லூயிஸ் மத்தியாஸ் விருப்ப மாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு சென்றுவிட்டதாகப் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.