திருச்சி என்.ஐ.டி.யில் தேசிய பணிக்குழு ஆய்வு
திருச்சி, ஆக.14 திருவெறும்பூர் அருகே உள்ள என் ஐ டி கல்லூரியில் உயர்கல்வி நிறுவனங்களில் நிகழும் மாணவர்களின் தற்கொலை தொடர்பாக ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட தேசிய பணிக்குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது
நாடு முழுவதும் உள்ள ஐஐடி, என்ஐடி, ஐஐஎம், அரசு பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் அண்மைக் காலங்களில் அதிகரித்து வரும் மாணவர் தற்கொலைக்கான காரணங்களை ஆராய்வதற்காக உச்சநீதிமன்றம் சார்பில் தேசிய பணிக்குழு கடந்த மார்ச் மாதம் அமைக்கப்பட்டது.
அப்படி அமைக்கப்பட்ட தேசிய பணி குழுவிற்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரவீந்திர பட் தலைமையில் இந்தக் குழுவினர் நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி என் ஐடி கல்லூரியில் தேசிய பணிக்குழு தலைவர் ரவீந்திர பட் தலைமையில் 7 பேர் கொண்டக் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இங்கு பயிலும் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றம் பணியாளர்களிடம் கலந்துரையாடினர். மேலும் என்ஐடிவளாகத்தில் உள்ள மாணவர் மற்றும் மாணவிகள் விடுதி, வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்டப் பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வினபோது உயர்கல்வி நிறுவனங்களில் தெரியவரும் பிரச்னைகள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அறிக்கை அளிக்கப்பட்டும் அதை சரிசெய்ய அறிவுறுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும், நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்த அறிக்கையை இந்தக் குழு ஆண்டின் இறுதியில் உச்சநீதிமன்றத்துக்கு அறிக்கையாக சமர்ப்பிக்கும்.
இந்நிலையில் தேசிய பணிக்குழு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று ஆய்வு மேற்கொள்கிறது.