குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் : தொற்றுநோய் பரவும் அச்சம்

0 248
Stalin trichy visit

திருச்சி, ஆக.14 மணப்பாறையில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உள்ள குளத்தில் செத்து மிதக்கும் ஆயிரக்கணக்கான மீன்களால் துர்நாற்றம் . தொற்றுநோய் அச்சத்தில் பரிதவிக்கும் மக்கள்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இருந்து குமரபட்டி செல்லும் சாலையில் வாகைக்குளம் உள்ளது. இந்த குளத்தின் அருகே காமராஜ் நகர், குரு நகர், பெஸ்டோ நகர், சாய் நகர், அண்ணா நகர், லெட்சுமிபுரம் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகள் உள்ளது. இந்த பகுதியின் நிலத்தடி நீர் மட்டத்தின் நீராதாரமாகவும் வாகைக்குளம் உள்ளது. இந்த குளத்தில் அதிக அளவில் மீன்கள் உள்ள நிலையில் கரையில் குப்பைகள், கோழி கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகள் கொட்டப்பட்டு வரும் சூழலில் கழிவு நீரும் குளத்தில் கலக்கும் நிலையும் உள்ளது.

இதனால் குளத்தில் உள்ள மீன்கள் கடந்த ஐந்து நாட்களாக ஆயிரக்கணக்கில் செத்து மிதக்கின்றது. குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகின்றது. கடந்த சில தினங்களாக மீன்கள் இறந்து வரும் நிலையில் அந்த மீன்கள் அங்கு சுற்றித் திரியும் தெருநாய்கள் சாப்பிட்டு விட்டு மக்களை துரத்தும் நிலையும் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆயிரக்கணக்கான மாணவ – மாணவிகள் பயின்று வரும் பள்ளி, மருத்துவமனை ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் என அனைத்தும் குளத்தை சுற்றி உள்ள நிலையில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்களால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி மக்களுக்கு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது.

குளத்தின் கரையில் ஊராட்சி நிர்வாகத்தால் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு அப்பகுதிக்கு உப்பு தண்ணீர் விநியோகம் செய்யப்படும் நிலையில் ஆழ்குழாய் நீரும் மாசடையும் அபாயநிலை உள்ளதாகவும் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் மீன்கள் கடந்த சில தினங்களாகவே மீன்கள் செத்து மிதந்தாலும் இன்று காலை முதல் அதிக அளவில் மீன்கள் இறந்து வருகின்றது. இதனால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மீன்கள் இறப்பதற்கான காரணத்தை கண்டறிந்து இறந்த மீன்களை அப்புறப்படுத்தி துர்நாற்றம் வீசுவதை தடுத்து மக்கள் தொற்று நோய்க்கு ஆளாகாமல் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் குளத்தைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் எனவும் அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.