திருச்சியின் வளர்ச்சிக்கு உலர்துறைமுகம் அவசியம் : டெல்மின் எக்ஸ்போ கருத்தரங்கில் துரை வைகோ எம்.பி பேச்சு
திருச்சி, செப். 22 திருச்சி மாவட்ட நுண், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் கூட்டமைப்பான டிடிட்சியா ஏற்பாடு செய்திருந்த, முதல் டெல்மின் எக்ஸ்போ 2025 கண்காட்சி நேற்று நடைபெற்றது. நடைபெற்றது. நிறைவு நாள் நிகழ்ச்சியில் திருச்சி எம்.பி.துரை வைகோ கலந்து கொண்டு பேசுகையில்,
டெல்மின் எக்ஸ்போ ஒரு வணிகக் கண்காட்சி மட்டுமல்ல, ஒரு வணிக மேளா மட்டுமல்ல, இது ஒரு நம்பிக்கையின் ஒளியாக, ஒத்துழைப்பின் இசைவாக, படைப்பாற்றலின் உச்சமாக உயிரோட்டமான நிகழ்வாக ஏற்பாடு செய்தமைக்கு, டிடிட்சியா -வின் தலைவர், பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருச்சி மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள தொழில்துறையினர் எவ்வாறு தங்கள் சந்தைகளை விரிவாக்கலாம், நவீனத் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம், தேசிய மற்றும் உலகளாவிய அளவில் வலுவாகப் போட்டியிடத் தேவைப்படும் ஆற்றல்கள், வழிமுறைகள் என்னென்ன என்பது பற்றிய ஆழமான உரையாடல்கள் இந்த நிகழ்வில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றன.
தொழில் வளர்ச்சியில் சென்னைக்கு அடுத்து கோவைக்கு நிகராக நமது திருச்சி, தமிழ்நாட்டின் வலுவான தொழில்துறை மாநகரமாக மாறுவதற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டிருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன்.
திருச்சி மாநகரம், சாலை, இரயில், விமானம் போக்குவரத்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. NIT, IIIT, IIM, பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக வளாகம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. அதனால் தொடர்ந்து பட்டதாரிகள், பொறியாளர்கள், திறமையான நிபுணர்களை உருவாக்கி வருகின்றன. இவை அனைத்தும் நமக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அளிக்கின்றன. இப்போது நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், இந்த அடித்தளத்தை தொழில்துறை வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டு பயன்பெறுவது தான்.
இந்தச் சூழலில், நான் நமது திருச்சி தொகுதிக்கான மனப்பூர்வமாக முன்னெடுத்து வரும் சில முக்கிய முயற்சியை அவர்களுடன் பகிர்ந்துகொண்டேன். அதில், திருச்சியின் வளர்ச்சிக்கு மிக அவசியமான Dry Port எனப்படும் உலர் துறைமுகம் நிறுவுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறேன்.
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள G – கார்னர் பகுதியில் உயர் சுழல் சாலை அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளேன், சஞ்சீவி நகர் பகுதியில் சர்வீஸ் ரோடு அகலப்படுத்தப்பட்டு சுரங்கப்பாதை, கொள்ளிடம் Y- கார்னர் பகுதியில் சுரங்கப்பாதை என 160 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைப் பெற்றுத் தந்துள்ளேன்.
தற்போது உள்ள திருச்சி ESIC மருத்துவமனையை 100 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனையாக உயர்த்தவும், ESI மண்டல துணை அலுவலகத்தை திருச்சிக்கு கொண்டுவரவேண்டும் என்றும் ஒன்றிய தொழிலாளர் நலன் கேபினட் மற்றும் இணை அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
எனது முயற்சியால் திருச்சி-சென்னை, திருச்சி – ஹைதராபாத், திருச்சி – மும்பை மற்றும் திருச்சி – பெங்களூரு ஆகிய நான்கு உள்நாட்டு வழித்தடங்களிலும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
திருச்சி தொகுதியில் நிலுவையில் இருந்த மேலகல்கண்டார் கோட்டை இரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளின் ஆக்கப்பணிகள் தொடங்கப்பட்டும், கட்டுமானப்பணிகள் நடைபெற்றும் வருகின்றன.
இவை மட்டுமல்ல, இன்னும் பல முயற்சிகளின் மூலமாக நம் திருச்சியின் வளர்ச்சிக்கு அயராது பாடுபடுவதை எனது முதல் கடமையாக கருதி உழைத்துவருகிறேன் .
எதிர்காலத்தில் டெல்மின் தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும், மிக முக்கியமான தொழில்துறை கண்காட்சிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்படும் .
நிறைவாக, டிடிட்சியா -விற்கு இந்த அற்புதமான முயற்சிக்கு மீண்டும் என் மனமார்ந்த பாராட்டுகளை ஏற்பாட்டாளர்கள், பங்கேற்பாளர்கள், ஸ்பான்ஸர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்ட இந்த முதல் நிகழ்வை இவ்வளவு பிரமாண்டமான வெற்றியாக்கிய அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
உங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக, மக்கள் பிரதிநிதியாக, நமது தொழில்முனைவோரின் குரலாக நான் தொடர்ந்து ஒலிப்பேன் என்று கூறினார்.
முன்னதாக அங்கு அமைக்கப்பட்டிருந்த தொழில் துறையினரின் கண்காட்சி அரங்குகளை துரை வைகோ நேரடியாக சென்று பார்வையிட்டு, காட்சிப்படுத்திய பொருட்கள், சேவைகள் பற்றியும் நிறுவனங்கள் பற்றியும் விவரங்களை கேட்டறிந்தார். . பங்கேற்ற ஒவ்வொரு நிறுவனத்தினருக்கும், அவர்களின் தொழில் முயற்சியில் முன்னேற்றம் காண்பதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.