மணப்பாறையில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டி
திருச்சி, செப். 29 மணப்பாறையில் கலைஞர் தமிழ் சங்கத்தின் சார்பில் விறுவிறுப்பாக நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் ஆண்கள்மற்றும் தமிழ்நாடு காவல்துறை சென்னை – விநாயகா மிஷன் சென்னை அணிகள் முதலிடம் பெற்றன.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கலைஞர் தமிழ்ச் சங்கம் மற்றும் ராமஜெயம் அறக்கட்டளை சார்பில் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து போட்டி நேற்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற்றது. பேருந்து நிலையம் அருகே பழைய மனமகிழ் மன்றத்தில் கோலாகலமாக போட்டிகள் துவங்கியது. முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சென்னை, தஞ்சாவூர், கோவை, சேலம், ஈரோடு, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 28 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியை திருச்சி மாமன்ற உறுப்பினர் முத்துசெல்வம், மருத்துவர் கலையரசன் ஆகியோர் தொட்ங்கிவைத்தனர்.
ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு காவல்துறை சென்னை அணி முதல் பரிசும், பனிமலர் சென்னை அணி இரண்டாம் பரிசும், ஜமால் முகமது காலேஜ் திருச்சி, திருமயம் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகள் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் பரிசுகள் பெற்றன.
பெண்கள் பிரிவில் சென்னை விநாயகா மிஷன் அணி முதல் பரிசும், தமிழ்நாடு காவல்துறை சென்னை அணி இரண்டாம் பரிசும், ஆத்தூரி பாரதியார் அணியும், சேலம் சக்தி கைலாஷ் அணியும் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் பரிசுகள் பெற்றன.
ஆண்கள் அணிக்கு முதல் பரிசாக ரூ.40 ஆயிரம் ரொக்கப் பரிசும் ராமஜெயம் நினைவு கோப்பையும், 2ம் பரிசாக ரூ.30 ஆயிரம், மூன்றாம், நான்காம் பரிசாக ரூ.20 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரமும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.
பெண்கள் அணிக்கு முதல் பரிசாக ரூ. 30 ஆயிரமும், 2ம் பரிசாக ரூ 20 ஆயிரமும், 15 ஆயிரம் மற்றும் பத்தாயிரம் ரூபாய் மூன்றாவது மற்றும் நான்காவது பரிசாக வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணிகளுக்கு ராமஜெயம் நினைவு கோப்பைகளும் வழங்கப்பட்டன. சிறந்த வீரர்களுக்கு ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
இதில் மணப்பாறை திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி, துவரங்குறிச்சி பேரூராட்சி துணைத்தலைவர் ரதிரமேஷ், முன்னாள் நகர துணைச்செயலாளர் சரவணன், முன்னாள் ஒன்றியக்குழு உற்ப்பினர் கீதா ராஜாகாவேரிமணியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கைப்பந்து ரசிகர்கள் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.