நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் வெட்டப்பட்ட சாலையோர மரங்கள்: தடை போட்ட உயர்நீதிமன்றம்

0 424
Stalin trichy visit

திருச்சி, அக். 28  மணப்பாறையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் வெட்டப்பட்ட சாலையோர மரங்கள்: தடை போட்ட உயர்நீதிமன்றம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள விராலிமலை சாலையில் நான்கு வழிச்சாலை பணிக்காக மணப்பாறை நகர எல்லை வரை உள்ள சாலையோர மரங்களை அகற்றிட நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் முடிவு செய்து அதன்படி 404 மரங்களை கடந்த 23 ம் தேதி ஏலம் விட்டனர். இந்த ஏலத்தில் 39 பேர் கலந்து கொண்ட நிலையில் தொட்டியத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் 6.70 லட்சம் ரூபாய்க்கு ஏலம் கோரியுள்ளார். ஆனால் அவரின் ஒப்பந்த புள்ளியில் பிழை இருப்பதாக கூறி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ரத்து செய்து தொப்பம்பட்டியைச் சேர்ந்த பவித்ரா என்பவருக்கு 6 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு வழங்கி உள்ளனர். இதையடுத்து அவருக்கு மரங்களை வெட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்ட நிலையில் அவசர கதியில் மரம் வெட்டும் பணி துவங்கியது.

இந்நிலையில் சரவணன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தான் அதிக தொகை ஒப்பந்த புள்ளி கோரியும் அதை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ரத்து செய்து விட்டதாக கூறி வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சரவணன் அதிக தொகைக்கு ஒப்பந்த புள்ளி கோரிய நிலையில் அவருக்கு வழங்காமல் இன்னொருவருக்கு வழங்கி இருக்கும் சூழலில் முதலில் மரங்களை வெட்டுவதை நிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் மரம் வெட்டும் பணியை நிறுத்த ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினர். இருப்பினும் சில மரங்களை அவசர அவசரமாக வெட்டி எடுத்துச் சென்றனர். மணப்பாறையில் சாலையோரத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மரங்களை குறைந்த விலைக்கு ஒப்பந்தபுள்ளி கோரச் செய்து அரசிற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுக் கொண்டே இருப்பதும் இதனால் அரசிற்கு அவப்பெயர் ஏற்படுத்திட முயற்சி செய்வதும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.