நங்கமங்கல சத்திரத்தை மீட்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணி மனு
திருச்சி அக் 29- இந்து முன்னணி கோட்ட செயலாளர் போஜராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டியன், மணிகண்டன் ஆகியோர் தலைமையில் குழுவினர் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சரவணனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம், மண்ணச்சல்லூர் தாலுகா, வெங்கங்குடி கிராமத்தில் நங்கமங்கல சத்திரத்தில் அமைந்துள்ள பழமையான கல்மண்டபத்தை தற்போது இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்து அங்கே வக்ப் சொத்து என போர்டு வைத்துள்ளனர்.
பழமையான கல்மண்டபத்திற்கு அருகே ஒரு மசூதியும் அமைந்துள்ளது. அந்த மசூதிக்கு அருகே இருந்த கல்மண்டபத்தின் ஒரு பகுதியை அகற்றியுள்ளனர். அந்த கல்மண்டபத்தின் தூண்களில் இந்து கடவுள்களின் திருவுருவங்கள் அமைந்திருந்ததாக அக்கிராம மக்கள் கூறுகிறார்கள். தற்போது அந்த கல்மண்டபத்தையும் இடித்து அகற்றியுள்ளனர்.
அங்கு அமைந்துள்ள கல்மண்டபத்தின் தூண்கள் அனைத்தும் இந்துக்களின் பாரம்பரிய கோவில் மற்றும் சத்திரத்தின் மாதிரியை கொண்டுள்ளது. மேலும் அந்த பகுதியின் பெயரும் நங்கமங்கல சத்திரம் என்ற இந்து பெயரிலேயே அழைக்கப்படுகிறது.
எனவே மாவட்ட கலெக்டர் விரைந்து அந்த பகுதியை ஆய்வு செய்து இந்து பக்தர்களுக்கு சொந்தமான சத்திரத்தை சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு பழமை மாறாமல் புணரமைத்து பக்தர்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்குமாறு இந்துமுன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் பாண்டியன் கூறி உள்ளார்.