சாலை விபத்தில் பால் வியாபாரி உயிரிழப்பு
திருச்சி, நவ.6 திருச்சி மாவட்டம் துறையூர் அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் பால் வியாபாரி ஒருவர் உயிரிழந்தார்.
துறையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குன்னுப்பட்டி ஊராட்சி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த விவசாயி சேகர் இவரது மகன் விஜய். திருமணம் ஆகாதவர். இவர் தினமும் துறையூர் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்கு பால் வியாபாரம் செய்து வந்துள்ளார்.
அதன்படி இன்று துறையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை பரவலாக மழை பெய்து கொண்டிருந்தபோதிலும், வழக்கம்போல் வாடிக்கையாளர்களுக்கு பால் வழங்கும் நோக்கில் தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.
அப்போது பெரம்பலூர் சாலையில் பெருமாள் மலை அடிவாரம் என்ற பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது, மழையின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த விஜயின் இருசக்கர வாகனம் லாரி பின் பக்கத்தில் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த விஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த துறையூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.