சேதமடைந்த எம்.ஜி.ஆர் சிலை அரசு செலவில் சீரமைக்கப்படும் : திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்
சேதமடைந்த எம்.ஜி.ஆர்.சிலை அரசு செலவில் சீரமைக்கப்படும் என்று திருச்சிமாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி கூறினார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில நாள்தோறும் 6000 RTPCR சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.சோதனை எண்ணிக்கையானது கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.தொற்றால் பாதிக்கப்பட்டோரில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் 70 முதல் 80 வயதிற்கு மேற்பட்டவர்களே அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழக்கின்றனர்.திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் மொத்த வணிகம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் ஓரிரு நாட்களில் அதனை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்த பிறகு சிலையை மூடியிருந்த துணிகளை அகற்றும் போது எதிர்பாராத விதமாக கைப் பகுதி சேதமடைந்தது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். போலீசாரின் விசாரணையில் இது விஷமிகள் செயல் இல்லை என கண்டறிந்துள்ளனர். சேதப்படுத்தப்பட்ட சிலை அரசு சார்பில் உடனடியாக சீரமைக்கப்படும், மேலும் அனைத்து தலைவர்களின் சிலைகளுக்கும் நீதிமன்ற ஆணையின்படி பாதுகாப்பு கூண்டுகள் அமைக்கப்பட உள்ளதாக கூறினார்.