ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் : சோழப் பேரரசு கட்சி மாநில மாநாட்டில் தீர்மானம்

0 140
Stalin trichy visit

திருச்சி, ஜன.23 தமிகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என திருச்சியில் நடைபெற்ற சோழப் பேரரசு கட்சியின் முதல்மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கள்ளர் முன்னேற்ற சங்கம், சோழப் பேரரசு கட்சியின் சார்பில், கள்ளர் எழுச்சி மாநாடு எனும் கட்சியின் முதல் மாநில மாநாடு தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சியின் நிறுவனத் தலைவர் என். சரவணன் மழவராயர் பேசுகையில், திராவிட இயக்கங்கள் நமது சமூகத்தின் ஒற்றுமையை விரும்பாது பிரித்து வழிநடத்தி வருகின்றன. முக்குலத்தோர் சமூகத்துக்கு ஆளும் கட்சிகள் பிரதிநிதித்துவம் அளித்தாலும் அவர்களால் நமது சமூகத்துக்கான குரலை சட்டப் பேரவையிலோ, நாடாளுமன்றத்திலோ எழுப்ப முடியவில்லை. ஆளும் கட்சி கூறுவதையே பேச முடிகிறது. எனவே, நமக்கான குரலாக நாம்தான் ஒலிக்க வேண்டும். அதற்கு சமூக ஒற்றுமை அவசியமானது என்றார்.
புதுக்கோட்டை சமஸ்தானம் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ஆர். சாருபாலா தொண்டைமான் பேசுகையில், தமிழகத்தை ஆளும் கட்சியில் ஊழல் மலிந்து கிடக்கிறது. தேர்தலுக்கு பணத்தை செலவழித்து வெற்றி பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் உள்ளனர். வாக்குக்கு பணம் கொடுத்தாலும் நமது சமூகம் சிந்தித்து வாக்களிக்க வேண்டியது அவசியம் என்றார்.

தஞ்சாவூர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த பூண்டி டி. கிருஷ்ணசாமி வாண்டையார் பேசுகையில், ஆங்கிலேயர் காலத்திலேயே போர்க்குணம் கொண்ட நமது சமூகம், இன்று அடையாளமின்றி நிற்கிறது. எனவே, சமூக ஒற்றுமை அவசியமானது என்றார்.

பின்னர், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கல்வி, வேலைவாய்ப்பில் கள்ளர் சமூகத்துக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். பிசி, எம்பிசி, டிஎன்சி, டிஎன்டி என நான்கு நிலைகளில் கள்ளர் சமூகத்துக்கு சாதி சான்று வழங்குவதை கைவிட்டு ஒரே சாதி சான்று வழங்க வேண்டும். கள்ளர் சமூகத்துக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். திருச்சி விமானநிலையத்துக்கு ராஜ, ராஜ சோழன் பெயர் சூட்ட வேண்டும். ராஜ, ராஜ சோழனுக்கு மணிமண்டபமும், வெண்கலைச் சிலையும் அமைக்க வேண்டும். நம்மாழ்வாருக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும். மேலூரில் உயிரிழந்த நமது முன்னோர்கள் நினைவாக நினைவுத்தூண் அமைக்க வேண்டும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, தேனி மாவட்டங்களில் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் புதிய தொழிற்சாலைகள் நிறுவ வேண்டும். தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அதன்படி இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். புதுக்கோட்டை சமஸ்தான மன்னருக்கு கட்டப்படும் மணிமண்டப கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில், அகில இந்திய முக்குலத்தோர் பாசறைத் தலைவர் வி.ஜி. சிற்றரசுத் தேவர், வரலாற்று ஆய்வாளர் சம்பந்தமூர்த்தி மழவராயர், கள்ளர் மஹா சங்கத்தலைவர் பாண்டியன் மணியர், தமிழர் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் வதிலை செல்வம் உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர். புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் மாநாட்டில் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.