சமத்துவபுரம் வீடுகள் ஒதுக்கீட்டில் முறைகேடு குற்றச்சாட்டு: பொதுமக்கள் போராட்டம்
திருச்சி, பிப்.5 துறையூர் அருகே சமத்துவபுரம் வீடுகள் ஒதுக்கீட்டில் முறைகேடு குற்றச்சாட்டு: பொதுமக்கள் போராட்டம்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகிலுள்ள தளுகை ஊராட்சியில் அமைந்துள்ள சமத்துவபுரம் குடியிருப்பு திட்ட வீடுகள் ஒதுக்கீட்டில் கடுமையான முறைகேடுகள் நடைபெறுகின்றன எனக் குற்றம்சாட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமத்துவபுரம் திட்டம் வீடில்லாத ஏழை மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு அரசு வழங்கும் முக்கியமான குடியிருப்பு திட்டமாகும். ஆனால் தளுகை ஊராட்சியில் இந்த வீடுகள் உண்மையில் வீடு இல்லாதவர்களுக்கு வழங்கப்படாமல், ஏற்கனவே வீடு வசதி கொண்டவர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு டோக்கன் வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பாதிக்கப்பட்டோரின் கூறுகையில், ஒரு வீடு ஒதுக்கீட்டிற்காக ரூ.3 லட்சம் வரை பணம் கேட்கப்பட்டதாகவும், சிலர் முன்பணம் கொடுத்த பின்னரும் வீடு வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
அதில் ஒருவரிடமிருந்து ரூ.60,000 பெறப்பட்டு, மீதித் தொகையை வழங்க முயன்றபோது “உங்களுக்கு வீடு ஒதுக்கப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த முறைகேடு குறித்து வெளியில் பேசியதற்காக பாதிக்கப்பட்ட நபரின் வீட்டிற்கு இரவு நேரத்தில் சிலர் சென்று மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. “ஏன் பேட்டி கொடுத்தீர்கள்?” என்று கேட்டு தொந்தரவு செய்ததுடன், ஒன்றிய அளவிலான நிர்வாக தொடர்புகள் மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் உள்ளூர் கிளை செயலாளர் தொடர்புடையவராக கூறப்படுகிறார்.
இந்நிலையில், உண்மையில் வீடு இல்லாத ஏழை பொதுமக்கள் கடும் மனவேதனையுடன், சமத்துவபுரம் வீடுகள் வழங்கும் முறையில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், பணம் வாங்கி வீடு ஒதுக்கீடு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், “வீடு இல்லாதவர்களுக்காக உள்ள திட்டத்தில் கூட ஊழல் நடந்தால், எங்களுக்கெங்கே நீதியிருக்கும்?” என்று கேள்வி எழுப்பினர்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தொடர்புடைய துறை அதிகாரிகள் உடனடி விசாரணை மேற்கொண்டு, உண்மை நிலையை வெளிக்கொண்டு வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
முறையாக ஆய்வு நடத்தி தகுதியுள்ள வீடடற்ற ஏழைகளுக்கு மட்டுமே சமத்துவ வீடுகளை ஒதுக்க வேண்டும் என்று இதில் ஈடுபட்டுள்ள இடத்தரகர்கள் மற்றும் அதிகாரிகளையும் கடுமையான நடவடிக்கை வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்