பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: கையில் முட்டையுடன் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

0 112
Stalin trichy visit

திருச்சி, பிப்.12 பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: கையில் முட்டையுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய திமுக கூட்டணி கட்சியினர்

2026-27-ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு வழங்கப்படாமல் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டித்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் இன்று தமிழகம் முழுவதும் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன.

அதேபோல திருச்சி மாநகர் திமுக சார்பாக பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்திற்கான கல்வி நிதி (₹3,458 கோடி), குடிநீர் திட்ட நிதி (₹3,112 கோடி) மற்றும் 100 நாள் வேலைத் திட்ட நிலுவைத் தொகை (₹2,000 கோடி) போன்ற அத்தியாவசிய நிதிகள் பட்ஜெட்டில் விடுவிக்கப்படவில்லை என போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.

மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைச் சிதைக்கும் வகையில் புதிய சட்டங்களைக் கொண்டு வருவது மற்றும் அதற்கான நிதியைக் குறைத்துள்ள ஒன்றிய அரசின் நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காததை குறிப்பிடுமாறு அனைவரும் கைகளில் முட்டைகளை ஏந்தி ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்
மேலும் தமிழக உரிமைகளைத் தாரைவார்த்துவிட்டு பாஜக அரசுக்குத் துணைபோவதாகக் கூறி அதிமுகவை கண்டித்தும் கோசங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ் , மதிமுக, விசிக, இடதுசாரிகள், எஸ்டிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம், மற்றும் கூட்டணி கட்சிகள் பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.