வேளாண் மாணவர்கள் சார்பில் அப்பாதுரை கிராமத்தில் கால்நடை மருத்துவமுகாம்
திருச்சி, பிப். 20 திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அப்பாதுரை கிராமத்தில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமை தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவன மாணவர்கள், ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்தனர்.
முகாமில் கால்நடை மருத்துவர் தென்றல் பங்கேற்று, பால் மாடுகளில் ஏற்படும் கோமாரி நோய், மடிவீக்கம், குடல்வலி, தோல் நோய்கள் போன்றவற்றின் அறிகுறிகள், தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சை குறித்து விரிவாக விளக்கமளித்தார். குறிப்பாக, கால்நடைகளுக்கு காலமுறைப்படி தடுப்பூசி போடுவதின் அவசியம், சுத்தமான கால்நடை கொட்டகை பராமரிப்பு, சத்தான தீவன வழங்கல், தூய்மையான குடிநீர் அளித்தல் போன்றவை குறித்து விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், கால்நடைகளின் ஆரோக்கிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தேவையான மருந்துகள் வழங்கப்பட்டன. பால் உற்பத்தி அதிகரிக்கும் முறைகள், மாடுகளில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் பாதுகாப்பது, கால்நடை இனப்பெருக்க மேலாண்மை போன்ற பயனுள்ள ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. முகாமில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்களின் கால்நடைகளை கொண்டு வந்து பரிசோதனை செய்து கொண்டு, சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர்.
இந்த மருத்துவ முகாமை தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவன மாணவர்களான அகமது இஸ்மாயில்.அ, அன்புசெல்வன்.நீ, அர்ச்சுதன்.பி, அருண்குமார்.அ, பாலாஜி.செ, தனுஷ் ராஜ்.ச, தாரணி.தா, தருண்.தி, பிரான்சிஸ் சேவியர்.எ, கோகுல்.ஏ ஆகியோர் ஒருங்கிணைந்து சிறப்பாக நடத்தினர்.
இந்நிகழ்விற்கு செல்வி ரா. பிரியங்கா (உதவி பேராசிரியர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர் – வேளாண்மை விரிவாக்கத் துறை),மு. அப்துல் ரஹ்மான் (உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர் – தாவர மரபியல் மற்றும் இனப்பெருக்கத் துறை), சு. சுகுணா (உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர் – பயிர் நோயியல் துறை) ஆகியோர் வழிகாட்டுதல் வழங்கினர். இந்த முயற்சி கிராமப்புற விவசாயிகளின் கால்நடை பராமரிப்பு திறனை மேம்படுத்துவதுடன், பால் உற்பத்தி உயர்வுக்கும், விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உதவியாக இருக்கும் என பொதுமக்கள் பாராட்டினர்