திருவானைக் கோவில் அடிமனை பிரச்சனை விவகாரம் – அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

0 191
Stalin trichy visit

திருச்சி, பிப்.23  திருவானைக் கோவில் அடிமனை பிரச்சனை விவகாரம் – அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு!

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் மாரி (எ) பத்மநாபன் மற்றும் பொது மக்கள், மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று கோரிக்கை மனு ஒன்றரை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலை சுற்றி, சுமார் 5,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், நான்கு தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள நிலங்கள் கோவிலுக்கு சொந்தமானது, இந்த நிலங்களை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என, கோவில் செயல் அலுவலர் கடந்த 2023 ஆம் ஆண்டு கடிதம் அனுப்பியுள்ளார். இதனால் இப்பகுதியில் வசித்து வரும் மக்கள் சொத்துக்களை வாரிசுகளின் பெயருக்கு மாற்றம் செய்ய முடியாமலும், கிரயம் செய்து கொடுக்க முடியாமலும், மேலும் அந்த சொத்துக்கள் மீது கடன்கள் பெற முடியாத நிலையிலும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம்.

மேலும் எங்கள் சொத்து சம்பந்தமாக கிரயம் பெற்ற நாளிலிருந்து அரசுக்கு உண்டான வீட்டு வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி மற்றும் தொழில் வரி, மின்சார கட்டணங்களை முறையாக செலுத்தி வருகிறோம். இந்த நிலையின் கோவில் செயல் அலுவலர் எதற்காக இந்த உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது எங்களுக்கு தெரியவில்லை.

இந்நிலையில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், மாவட்ட வருவாய் அலுவலர் இது குறித்து விசாரித்து, ஆறு மாத காலத்திற்குள் பரிசீலிக்க வேண்டும் என கடந்த 16.07.2024 ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் மாவட்ட வருவாய் அலுவலர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள், நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத, மாவட்ட வருவாய் அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்து, எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனு அளிக்கும் நிகழ்வில் திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் எஸ்.கலைமணி, பிரஸ் வெங்கடேசன், எஸ்.கே.ராஜு, வைத்தியநாதன், ராஜகோபாலன், மெக்கானிக் பாஸ்கர், ராஜகோபாலன், திருவேங்கடம் யாதவ், வி.என்.ஆர் செல்வம், பாலசுப்பிரமணியம் தர்மலிங்கம், ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.