முசிறி அருகே கர்ப்பிணி பெண் மர்மச்சாவு: உறவினர்கள் சாலை மறியல்
திருச்சி, பிப். 24 முசிறி அருகே கர்ப்பிணி பெண் மர்மச்சாவு: கணவன் மீது உறவினர்கள் புகார் – முசிறியில் சாலை மறியலால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே அரியனாம்பேட்டையில் கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், அவரது கணவரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
முசிறி அருகே அழகரை ஊராட்சி, அரியனாம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பாரதிராஜா (29). தனியார் ஹோட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரைச்சேர்ந்த பாரதி (24) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில், பாரதி தற்போது மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார். நேற்று மாலை பாரதி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அவர் தூக்கில் சடலமாகத் தொங்கியதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தொட்டியம் போலீசார், பாரதி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில்
பாரதிராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பாரதியின் உறவினர்கள் முசிறி அரசு மருத்துவமனை முன்பாக திருச்சி – நாமக்கல் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லதுரை மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து உறவினர்கள் கலைந்து சென்றனர். திருமணமாகி 4 ஆண்டுகளிலேயே பாரதி உயிரிழந்ததால்,
இது வரதட்சணை கொடுமையால் நடந்த கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து முசிறி சப்-கலெக்டர் சுஷ்ரி சுவாங்கி குந்தியா தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
முன்னதாக இறந்து போன பாரதியின் தாய் மலர் கூறும்போது எனது மருமகன் பாரதிராஜாவிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. இதனால் எனது மகளைத்தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தி வந்தார். வரதட்சணை கேட்டும் கொடுமைப்படுத்தியுள்ளார். பாரதியின் இறப்பிற்கு அவரே காரணம் எனப்புகார் தெரிவித்துள்ளார். கர்ப்பிணி இளம் பெண் இறப்பும், உறவினர்கள் சாலைமறியல் போராட்டமும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.