திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வாழை மரபணு சேமிப்பு வங்கி துவக்கம்
திருச்சி, ஏப். 29 திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வாழை மரபணு சேமிப்பு வங்கி துவக்கம் – புதிய ரகங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் என வேண்டுகோள்
திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில், ‘வாழைப் பன்முகத்தன்மை கண்காட்சி மற்றும் விவசாயிகள் சந்திப்பு’ நிகழ்ச்சி மற்றும் 25 ஆவது ஆராய்ச்சி ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த கூட்டத்தில்
டில்லியில் உள்ள தாவர வகைப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைகள் சட்ட ஆணையத்தின் தலைவர் டாக்டர் மகாபத்ரா , பதிவாளர் ஜெனரல் டாக்டர் அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய தாவர வகைப் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைகள் சட்ட ஆணையத்தின் தலைவர் டாக்டர் மகாபத்ரா :
இன்று பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்ட வயல்வெளிகளை பார்வையிட்டோம். மேலும் வாழை மரபணு சேமிப்பு வங்கி என்ற புதிய வசதியையும் திறந்து வைத்தோம். இது வாழை வகைகள் பதிவு செய்யப்பட்டவற்றை பாதுகாக்கும்.
வாழை பயிரில் பல்வேறு மாநிலங்களில் பெரிய அளவில் பல ரகங்கள்காணப்படுகிறது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களிலும், இங்கு நாம் இருக்கும் கேரளா, தமிழ்நாடு போன்ற பகுதிகளிலும் பல உள்ளூர் வகைகள் உள்ளன.
வாழை ஒரு மிக முக்கியமான பயிராகும். இதில் அதிக மரபணு பன்மை உள்ளது.
நாங்கள் ஆண்டுக்கு சுமார் 1 மில்லியன் டன் வாழையை ஏற்றுமதி செய்கிறோம். 1.4 பில்லியன் மக்கள் தொகையுள்ள நாட்டில், நமது உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொண்டு, ஏற்றுமதியும் செய்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.
வேளாண் தோட்டக்கலை உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது 370 மில்லியன் டன் உற்பத்தியை கடந்துவிட்டோம். இதன் வளர்ச்சி விகிதம் 4%க்கும் மேல் உள்ளது. மேலும், வேளாண் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்30%க்கும் அதிக பங்களிப்பை தருகிறது.
வேளாண் உயிரினப் பன்மை என்பது புதிய பயிர் வகைகளை உருவாக்க மிகவும் முக்கியமானது. இதை விவசாயிகள் தலைமுறைகள் கடந்தும் பாதுகாத்து வருகின்றனர். அவர்கள் இந்த பன்மையின் உண்மையான பாதுகாவலர்கள். இந்த பன்மை தான் காலநிலை மாற்றம் போன்ற சவால்களை எதிர்கொள்ள புதிய வகைகள் உருவாக உதவுகிறது.
இந்த முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்திய அரசு 2001ஆம் ஆண்டு “Protection of Plant Varieties and Farmers’ Rights Act” என்ற சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் மூலம், விஞ்ஞானிகள் மட்டுமல்லாமல் விவசாயிகளும் தங்களின் சொந்த வகைகளை பதிவு செய்து உரிமை பெற முடியும். இது தனிப்பட்டவர்களாகவும் அல்லது குழுவாகவும் இருக்கலாம்.
மேலும், இந்த சட்டம் விவசாயிகளை கௌரவிக்கவும், பரிசளிக்கவும் ஏற்பாடுகள் கொண்டுள்ளது. அவர்கள் உயிரினப் பன்மையை பாதுகாக்கும் பங்களிப்பிற்காக விருதுகள் வழங்கப்படுகின்றன. சிலர் ஏற்கனவே இவ்விருதுகளை பெற்றுள்ளனர்.
குழுக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை, தனிநபர்களுக்கு 1 முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இப்போது புதிதாக, இந்தப் பன்மையை பாதுகாக்கும் விவசாயிகளுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை 15 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் தொடர்ந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள முடியும்.
இந்த பணிகளில் வாழை ஆராய்ச்சி நிறுவனம் போன்றவை தொழில்நுட்ப உதவி, வழிகாட்டுதல், மற்றும் ஆதரவு வழங்கும். ஏற்கனவே சுமார் 15 வாழை வகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை விவசாயிகள் உருவாக்கிய வகைகள். இவை விவசாயிகளிடம் இருந்தே பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் இவை இழந்துவிட்டால் நிரந்தரமாக அழிந்து விடும் அபாயம் உள்ளது.
அதனால், இவ்வகைகளை பாதுகாக்க மரபணு சேமிப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல பிரதிகளாக இவ்வகைகள் வளர்க்கப்பட்டு பாதுகாக்கப்படும். இன்று இந்த வசதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது நாட்டில் முதன்முறையாக உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.
இந்த ஜீன் வங்கியில், பதிவு செய்யப்பட்ட அனைத்து வகைகளும் பாதுகாப்பாக வைக்கப்படும். எதிர்காலத்தில், விவசாயிகள் பெருமளவில் வளர்க்க முடியாதபோது, அரசு இவ்வகைகளை பெருக்கி வழங்க முடியும்.
இவற்றை நாம் இழக்காமல் பாதுகாப்பது மிகவும் முக்கியம். இன்று பல விவசாயிகள் விவசாயத்தை விட்டு விலகுகிறார்கள். அவர்களுடைய பிள்ளைகள் இதைத் தொடர விரும்பவில்லை. அப்போது அந்த வகைகள் அழிந்து விடும் அபாயம் உள்ளது. அதனால் அவை ஜீன் வங்கிகளில் பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்த திட்டம் இந்திய அரசின் ஆதரவுடன் செயல்படுத்தப்படுகிறது. ICAR அமைப்பின் வழிகாட்டுதலுடன் பல பயிர்களுக்கு ஜீன் வங்கிகள் அமைக்கப்பட்டுள்ளன.
புதிய ரகங்களை உருவாக்கும் விவசாயிகள் அவற்றை பதிவு செய்ய வேண்டும் அப்பொழுதுதான் அவற்றை தொடர்ந்து பாதுகாக்கவும் மேலும் பெருக்கவும் முடியும் அவ்வாறு பதிவு செய்யும் விவசாயிகளுக்கு அரசு ஊக்க தொகையும் வழங்குகிறது. தமிழ்நாட்டில் நெல் வாழை உள்ளிட்டவற்றில் பல புதிய ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது ஆனால் அவை பதிவு செய்யப்படவில்லை விவசாயிகள் இதனை கவனத்தில் கொண்டு புதிய ரகங்களை பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.