திருச்சி – திருப்பதி இடையே பகல் நேர ரயில் இயக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் : துரை வைகோ எம்.பி. வரவேற்பு
திருச்சி, மே 9 திருச்சி – திருப்பதி இடையே இரயில் இயக்கப்படும் என்று ஒன்றிய இரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதை வரவேற்கிறேன் என்று திருச்சி மக்களவை உறுப்பினர் துரைவைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது,
திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான திருச்சி – திருப்பதி இடையேயான பகல் நேர இரயில் சேவைக்கு ஒன்றிய இரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, குண்டூர் – திருப்பதி இடையே இயக்கப்படும் பகல் நேர இரயில் சேவை திருச்சிராப்பள்ளி வரை நீட்டிக்கப்பட்டு, திருச்சி – குண்டூர் – திருப்பதி வழித்தடத்தில் இயக்கப்படும்.
இந்தக் கோரிக்கையை முன்வைத்து மாண்புமிகு ஒன்றிய இரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை நேரில் சந்தித்த வலியுறுத்தினேன்.
மேலும், கடிதம் வாயிலாகவும் தொடர்ந்து பலமுறை வலியுறுத்தியிருந்தேன். அதன் விவரம் பின்வருமாறு:
• 27.03.2025 அன்று தென்னக இரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் எழுதினேன்.
• 10.12.2025 அன்று மாண்புமிகு ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் -க்கு கடிதம் எழுதினேன்.
• 04.02.2026 அன்று அவருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பினேன்.
• 07.03.2026 அன்று திருச்சி மண்டல இரயில்வே மேலாளருக்கு கடிதம் எழுதி விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
இந்த நீட்டிக்கப்பட்ட புதிய இரயில் சேவை திருச்சி உள்ளிட்ட மத்திய மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். திருப்பதி செல்லும் பக்தர்கள், மாணவர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள்.
இதற்காக வேண்டி, மாண்புமிகு ஒன்றிய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் -கும், தென்னக இரயில்வே மற்றும் திருச்சி மண்டல இரயில்வே அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் தெரிவித்துள்ளார்.