மது – போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி : முசிறி சப்-கலெக்டர் பங்கேற்பு
முசிறி, ஜூன் , 12 முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், வருவாய்த்துறை மற்றும் பள்ளி நிர்வாகம் இணைந்து நடத்திய மது மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் பல்த்தசார் தலைமை வகித்தார். வட்டாட்சியர்கள் லோகநாதன், பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முசிறி சப்-கலெக்டர் சுஷ்ரீ சுவாங்கி குந்தியா, போதைப்பொருட்களால் உடல் மற்றும் மனதிற்கு ஏற்படும் பாதிப்புகள், சமூகச் சீரழிவுகள் குறித்து விரிவாகப் பேசினார்.
மாணவர்கள் போதைப் பொருட்களின் பிடியில் சிக்காமல் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து, உணவுப் பாதுகாப்பு அலுவலர் சினேகா பேசுகையில், போதைப்பொருள் இல்லாத ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினார். பின்னர், மாணவர்கள் போதை ஒழிப்பு குறித்து நடத்திய கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிட்ட சப்-கலெக்டர் மற்றும் அதிகாரிகள், சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்களைப் பாராட்டினர்.
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கணேசன், போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான உறுதிமொழியை வாசிக்க, அனைவரும் ஏற்றுக்கொண்டனர். முன்னதாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் பள்ளி மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிறைவாக, உதவித் தலைமை ஆசிரியர் நாகேஷ் நன்றி கூறினார்.