திருச்சி தமிழ்நாட்டின் தலைச்சிறந்த மாவட்டமாக தரம் உயர்த்தப்படும் : அமைச்சர் ரமேஷ் பேட்டி

0 47
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 12  திருச்சி மாவட்டம் 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் தலைச்சிறந்த மாவட்டமாக தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ரமேஷ் பேட்டி.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளுடனான சிறப்புக் கலந்தாய்வு மற்றும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், மாவட்டத்தின் தற்போதைய வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்:-

இந்த ஆய்வுக் கூட்டம் மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது. மாவட்டத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள திட்டங்களின் நிலை, தற்சமயம் நடந்து வரும் பல்வேறு துறை சார்ந்த பணிகள் மற்றும் எதிர்காலத்தில் மக்களுக்காகக் கொண்டு வரப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதிகள் என்ற முறையில் பொதுமக்களின் கோரிக்கைகளையும், தேவைகளையும் அதிகாரிகளிடம் எடுத்துரைத்து, அதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

தமிழக முதலமைச்சர் மக்களுக்காகப் பல்வேறு சிறப்பான திட்டங்களைத் தீட்டி வருகிறார். இந்தத் திட்டங்கள் அனைத்தும் எவ்வித ஊழலோ, சுரண்டலோ இன்றி, தங்கு தடையின்றி நேரடியாக மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதே இந்த ஆய்வுக் கூட்டத்தின் முக்கிய நோக்கம். சுயநலத்திற்காக இல்லாமல், பொதுநல நோக்கோடு மட்டுமே மக்களின் உண்மையான தேவைகளை அறிந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

மக்களின் கோரிக்கைகளுக்கும், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் உடனுக்குடன் தீர்வு காணும் வகையில், இனிவரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் அனைத்துத் துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஒருங்கிணைந்த ஆய்வுக் கூட்டம் கட்டாயம் நடைபெறும்.

மக்கள் பிரதிநிதிகள் மூலம் பெறப்படும் பொதுமக்களின் கருத்துகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இன்னும் ஐந்தாண்டுகளுக்குள் திருச்சி மாவட்டம் தமிழகத்தின் மிகச் சிறந்த மாவட்டமாகத் தரம் உயர்த்தப்படும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.