இலவச வீட்டு மனை பட்டாக்கள் ரத்து? – ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் இன மக்கள் கோரிக்கை மனு

0 18
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 15  இலவச வீட்டு மனை பட்டாக்கள் ரத்து? – ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் இன மக்கள் கோரிக்கை மனு.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூலாங்குடி காலனி பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் இன மக்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாக்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் இன்று கோரிக்கை மனு அளித்தனர்.

கடந்த திமுக ஆட்சியின் போது, பள்ளி கல்வித்துறை அமைச்சரும் திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவின் பேரில், இப்பகுதியைச் சேர்ந்த 68 நரிக்குறவர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. ஆனால், பட்டா வழங்கி சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், வருவாய்த்துறையினர் அந்த நிலத்தை அளவீடு செய்து பயனாளிகளிடம் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக அரசின் தொல்குடி திட்டம் மூலம் தங்களுக்கு இலவச வீடு கட்டித் தரும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கச் சென்றபோது, தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் கூறுகையில்:-

கடந்த 2022-ஆம் ஆண்டுதான் எங்கள் நரிக்குறவர் சமூகம் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து பழங்குடியினர் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. ஒரு சிறிய வீட்டில் 3, 4 குடும்பங்கள் என 10-க்கும் மேற்பட்டோர் மழைக் காலங்களில் பெரும் சிரமத்திற்கு இடையே வசித்து வருகிறோம். அரசு பட்டா கொடுத்துவிட்டதே என்ற மகிழ்ச்சியில், வீடு கட்டும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கச் சென்றால், அந்த பட்டாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும், அது போலி என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

எந்த அரசு அமைந்தாலும் எங்களைப் போன்ற பழங்குடியின மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. அன்றாடம் ஊசி, பாசி மணி விற்று பிழைப்பு நடத்தும் ஏழை மக்களை ஏன் இப்படி ஆசை காட்டி ஏமாற்ற வேண்டும். பட்டா ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்றே எங்களுக்குத் தெரியவில்லை. இதுகுறித்து எங்கள் தொகுதி எம்.எல்.ஏ-விடமும் இனிமேல்தான் முறையிட வேண்டும். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, பட்டா ரத்து செய்யப்பட்ட ஆணையைத் திரும்பப் பெற்று, எங்கள் நிலத்தை அளவீடு செய்து பிரித்து வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.