மணப்பாறை அருகே இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதியதில் மனைவி உயிரிழப்பு : கணவர் படுகாயம்
திருச்சி, ஆக.3 மணப்பாறை அருகே வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மனைவி உயிரிழப்பு. கணவன் படுகாயம்.
திருச்சி, எரங்குடியைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 44). இவரது மனைவி வசந்தி (வயது 42) இருவரும் திருப்பூரில் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறனர். இன்று காலை எரங்குடியில் இருந்து திண்டுக்கல்லில் உள்ள தங்களது உறவினரை பார்த்துவிட்டு திருப்பூர் செல்வதற்காக இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வடக்குஅம்மாபட்டி பிரிவு சாலை அருகே செல்லும்போது பின்னால் இராமநாதபுரத்தில் இருந்து கேரளா நோக்கிச் சென்ற ஐஸ் வேன் இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதி சுமார் 50 அடி தூரத்திற்கு வண்டியை இழுத்துச் சென்றது. இதில் படுகாயமடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கருப்பையா மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.