திருச்சி அரியமங்கலத்தில் நள்ளிரவில் அகோரிகள் நவராத்திரி பூஜை நடத்தினர்
திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோரகாளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரி பயிற்சிபெற்ற அகோரி மணிகண்டன் பூஜைகள் செய்து நிர்வகித்து வருகிறார். இங்கு சனிக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி மற்றும் விஷேச காலங்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது. கடந்த 7ம் தேதி நவராத்திரி விழா தொடங்கியது முதல் தினசரி ஜெய் அகோரகாளி கோவிலில் நவராத்திரி பூஜைகள் நடந்துவந்தது.
நவராத்திரி விழாவின் 9ம் நாளான நேற்று ஜெய் அகோரகாளி சரஸ்வதிதேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதனைத்தொடர்ந்து நள்ளிரவில் ஜெய் அகோரகாளிக்கு பலிபூஜை செய்யப்பட்டும், ஜெய் அஷ்டகாலபைரவர் மற்றும் அங்குள்ள ஏனைய பரிவார தெய்வங்களுக்கு சிறப்புபூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.
இதையடுத்து நள்ளிரவில் அகோரிகள் தங்கள் உடம்பில் சாம்பல் பூசிக்கொண்டு யாக பூஜைகள் நடத்தினர். அப்போது டம்ராமேளம் அடித்தும் மற்றும் சிவவாக்கியம் வாசித்தும், சங்குமுழங்கியும், மந்திரங்கள் ஓதினர். இதில் கொரோனா காலம் என்பதால் அகோரிகள் மற்றும் குறைவான பக்தர்களே கலந்துகொண்டு காளியை வழிபட்டதுடன், சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். அகோரிகள் நடத்திய நள்ளிரவு பூஜையானது பக்தர்களின் பார்வைக்கு விசித்திரமாக இருந்தது.