கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டம் : நுகர்பொருள் வாணிபக்கழக பொது தொழிலாளர் சங்கம் அறிவிப்பு

0 103
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 13  பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் – தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்கம் அறிவிப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் பருவகால பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய போராட்டங்களை நடத்தப்போவதாக சிஐடியு சார்ந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், இன்று திருச்சியில் உள்ள சிஐடியு மாவட்ட அலுவலகத்தில், மாநிலத் தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் புவனேஸ்வரன் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் ராசப்பன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.

கூட்டத்திற்குப் பின் மாநில தலைவர் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்:–

நெல் கொள்முதல் நிலையங்களில் பல ஆண்டுகளாகப் பணியாற்றும் பருவகால பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக வழங்கப்படாத இளம் சிவப்பு அட்டையை உடனடியாக வழங்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாயுமானவர் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்கி, அதனை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும். எரிவாயு விநியோகப் பணியாளர்களின் பணி நிரந்தரம் தொடர்பாக நீதிமன்றம் தொழிலாளர்களுக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கியும், அதை நிர்வாகம் இதுவரை அமல்படுத்தவில்லை. உடனடியாகப் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். ஒன்றிய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத் திருத்தம் ஏழை எளிய மக்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடியினரைப் பாதிக்கும் என்பதால், அந்தத் திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும்.

மேலும், பொது விநியோகத் திட்டத்தில் தனியாரை அனுமதிக்கும் சாந்தகுமார் குழு பரிந்துரைகளை அமல்படுத்தக் கூடாது. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் மண்டல வாரியாகக் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இப்போராட்டத்திற்குப் பிறகும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால், மாநிலம் முழுவதும் உள்ள தொழிலாளர்களைத் திரட்டி சென்னையில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.