லால்குடியில் ஏழைகளின் மருத்துவர் மரணமடைந்தார்
திருச்சி மாவட்டம் லால்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்த மருத்துவரான 77 வயதான சீனிவாசன். இவருக்கு இரண்டு மகன்கள்.ஒருவர் பல்மருத்துவர் மற்றொருவர் இயன்முறை மருத்துவர். லால்குடியில் குடும்பத்துடன் வசித்து வந்த சீனிவாசன் பின்னர் திருச்சி தில்லை நகரில் குடியேறினார். லால்குடியில் 50 வருடங்களுக்கு மேலாக சிறிய அளவில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்தார். லால்குடி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், ஏழை,எளிய மக்கள் மருத்துவர் சீனிவாசனிடம் சிகிச்சை பெற்று வந்தனர். நோயாளிகளுக்கு விலை குறைவான மருந்து மாத்திரைகளை பரிந்துரை செய்வதால் சீனிவாசனை ஏழைகளின் மருத்துவர் என்று மக்கள் அழைத்து வந்தனர். லால்குடி பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் விவசாயிகள் உள்ளிட்ட பலருக்கும் சீனிவாசன் குடும்ப மருத்துவராக இருந்து வந்தார். உடல்நலக்குறைவால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் சீனிவாசன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.