கொழும்பில் நடந்த சர்வதேச கராத்தே போட்டியில் தங்கம், வெண்கல பதக்கங்களை வென்று திருச்சி திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
கொழும்பில் நடந்த சர்வதேச கராத்தே போட்டியில் தங்கம், வெண்கல பதக்கங்களை வென்று திருச்சி திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு.
இலங்கை, கொழும்புவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் சார்பில் தமிழகத்திலிருந்து பங்கேற்று பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் சர்வதேச அளவிலான கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட 7 நாடுகளில் இருந்து ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்தத் தொடரில் இந்தியா சார்பில், தமிழ்நாட்டிலுள்ள திருச்சி, கோயம்புத்தூர், சென்னை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கராத்தே வீரர்கள் பங்கேற்றனர். திருச்சியில் இருந்து பிரகாஷ் நகரைச் சேர்ந்த கராத்தே பயிற்சியாளர் சுதாகர் மற்றும் அவரிடம் பயிற்சி பெறும் ரோஹன், இசை இரண்டு சிறுவர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர்.
இதில் சுதாகர் 40 – 49 வயதுக்குட்பட்ட வீட்டரன் மாஸ்டர் (Veteran Master) பிரிவில் போட்டியிட்டு முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். சிறுவன்
ரோஹன் 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்று வெண்கலப் பதக்கத்தைவென்றார். சிறுவன் இசை 10 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்று வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.
சர்வதேச கராத்தே போட்டிகளில் பதக்கங்களைக் வென்று சாதனை படைத்த பயிற்சியாளர் சுதாகர் மற்றும் சிறுவர்கள் ரோஹன், இசை ஆகியோர் இன்று விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தனர். அவர்களுக்கு உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மாலை அணிவித்தும், பொன்னாடை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், சர்வதேச அளவில் தமிழ்நாட்டிற்கும், திருச்சியுக்கும் பெருமை சேர்த்த வீரர்களுக்கு பலரும் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.