வடகரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாய சங்கத்தினர் உண்ணாவிரதம்
திருச்சி, ஆக.22 தொட்டியம் வடகரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாய சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அப்போது, விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வடகரை வாய்க்கால் திருச்சி மாவட்டம் தொட்டியம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை, வெற்றிலை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதி வடகரை வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறுகிறது.
தற்போது தண்ணீர் இன்றி வாழை, வெற்றிலை கொடிகள் காய்ந்து வருகிறது. எனவே வடகரை வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தினர். ஆனால் இன்று வரை தண்ணீர் திறக்கப்படவில்லை.
தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு வடகரை பாசன வாய்க்காலில் கதவு அடைக்கப்பட்டு விட்டது. இதனால் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இந்த நிலையில் நேற்று தொட்டியம் தாலுகா அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தினர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். அவர்களிடம் தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் தமிழக வெற்றிக் கழக திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் ஜெகன்மோகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது திடீரென ஏலூர்பட்டி/சீனிவாசநல்லூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தி, உடலில் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.
அந்த விவசாயி கூறுகையில், “நான் அதிக அளவில் கடன் பெற்று வாழைகள் பயிரிட்டுள்ளேன். தற்போது தண்ணீர் இல்லாததால் வாழைகள் காய்ந்து வருகின்றன. எனவே வடகரை வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும்” என்றார்.