அதிகாரிகள் அலட்சியத்தால் மனஉளைச்சல் : பாதிக்கப்பட்டவர் மின்வாரிய அலுவலகம் முன்பு போராட்டம்
திருச்சி, ஆக. 25 மணப்பாறையில் அதிகாரிகள் அலட்சியத்தால் மனஉளைச்சால் பாதிக்கப்பட்டவர் மின்வாரிய அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
தமிழ்நாடு மின் வாரியம் சாா்பில், வீடுகளுக்கான மின் இணைப்புகளுக்கு இரு மாதங்களுக்கு ஒருமுறை மின் பயனீட்டுக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அரசின் மின் மானியம் பெறுவதற்காக ஒரே வீட்டுக்கு இருவேறு மின் இணைப்புகள் பெற்று சில இடங்களில் முறைகேடு நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து உரிய விசாரணை செய்து, முறைகேடாகப் பெறப்பட்ட மின் இணைப்புகளை ஒன்றிணைப்பதற்கு (மெர்ஜிங்) உத்தரவிடப்பட்டது. ஆனால், மின் இணைப்புகள் குறித்து களஆய்வு மேற்கொண்ட மின் வாரிய அலுவலா்கள், வழிகாட்டுதல் நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் பல்வேறு இடங்களில் தனித் தனியாகப் பெறப்பட்ட வீட்டு இணைப்புகளை ஒன்றிணைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதேபோல் திருச்சி மாவட்டம், மணப்பாறை ராஜீவ் நகரை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் என்பவருக்கு கடந்த 2024 டிசம்பர் மாதம் மின்வாரியம் அனுப்பிய சுற்றறிக்கையில் இவரது மின் இணைப்புடன் வேறொரு நபரின் பெயரில் உள்ள மின் இணைப்பும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது மின் இணைப்புடன் இணைக்கப்பட்ட மின் இணைப்பு இவரது வீட்டில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள மின் இணைப்பு எண்ணுடன் ஜாகிர்உசேனின் வீட்டு மின் இணைப்பு ஒன்றிணைக்கப்பட்டிருந்தது. இந்த முரண்பாடான மின் இணைப்பை நீக்குமாறு மணப்பாறை நகர மின் வாரியத்தில் புகார் மனு அளித்துள்ளார். ஆனால் தவறான ஒன்றிணைப்பை சரி செய்யாமல் மின்வாரிய அதிகாரிகள் ஜாகிர் உசேனை அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஒவ்வொரு முறையும் அதிக கட்டணம் செலுத்தி மன உளைச்சலுக்கு உள்ளான ஜாகிர் உசேன் கடந்த மாதம் மின் கட்டணம் செலுத்தவில்லை என கூறி மின்வாரிய ஊழியர்கள் அவர் வீட்டிற்கு சென்று மின் இணைப்பை துண்டிப்பு செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சிக்குள்ளான ஜாகிர் உசேன் மின்வாரிய அலுவலகத்தில் தனது இணைப்புடன் மெர்ஜிங் செய்யப்பட்ட வேறொருவரின் மின் கட்டணத்தையும் கடந்த 1 3/4 ஆண்டுகளாக நான்தான் செலுத்துகிறேன். எனக்கு சம்பந்தமில்லாத மற்றொரு மின் இணைப்பை மெர்ஜிங் செய்ததை நீக்க வேண்டும் என நேரில் முறையிட்ட நிலையிலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் தனது வீட்டை வாடகைக்கு விட முடியாமல் கடும் மன உளைச்சலுக்குள்ளான ஜாகிர் உசேன் நேற்று திண்டுக்கல் சாலையில் உள்ள நகர மின்வாரிய அலுவலகத்திற்கு தனது உறவினர்களுடன் சென்று தர்ணாவில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு அலுவலகம் வந்த உதவி மின் பொறியாளர் தனலட்சுமி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் ஏழு நாட்களுக்குள் மெர்ஜிங் இணைப்பை நீக்க நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததின் பேரில் தர்ணாவை கைவிட்டு எழுந்து சென்றனர்.
மின் வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர் மின்வாரிய அலுவலகத்தில் போராட்டம் நடத்திய சம்மபவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.