தந்தை-மகன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு : 2 பேர் கைது

0 11
Stalin trichy visit

திருச்சி, ஆக.24- திருவானைக்காவலில் தந்தை-மகன் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி திருவானைக்காவல் மேல கொண்டையம்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் வினோத் (வயது 36). இவர் கடந்த 21-ந்தேதி அந்தப்பகுதியில் உள்ள இறைச்சி கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மேல கொண்டையம்பேட்டை பகுதியை சேர்ந்த கவியரசன் (21), 18 வயது சிறுவன் மற்றும் அவரது ஆதரவாளர்களான நந்தகுமார் (30), ஸ்ரீதர் ஆகியோர் அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, வினோத்தின் மாமா ரமேஷ் என்பவரிடம் கவியரசன் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த இறைச்சி கடை முன்பு அவர்கள் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் ரமேஷிடம் இருந்து ரூ.1,500-ஐ பறித்துக்கொண்டு கவியரசன் தலைமையிலான கும்பல் அங்கிருந்து சென்றது. இந்த சம்பவம் குறித்து ரமேஷின் சகோதரரான சுரேஷ், கவியரசனின் தாயிடம் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கவியரசன், தனது நண்பர்களான சொக்கலிங்கம், நந்தகுமார், ஸ்ரீதர் ஆகியோரை அழைத்துக்கொண்டு நேற்று வினோத் வீட்டிற்கு சென்று, அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து வினோத் மற்றும் அவரது தந்தை குமரவேல், உறவினர் சுரேஷ் ஆகியோரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த 3 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து வினோத் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவியரசன், சொக்கலிங்கம் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் இரண்டு பேரும் ரவுடி பட்டியலில் உள்ளனர். மேலும் நந்தகுமார், ஸ்ரீதர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.