திருச்சி உள்பட 9 இடங்களில் ‘சிட்கோ’ மூலம் புதிய மகளிர் தொழிற் பூங்காக்கள்: அமைச்சர் மதன் ராஜா அறிவிப்பு
திருச்சி, செப். 2 திருச்சி துறையூர், மணப்பாறை உள்பட 9 இடங்களில் ‘சிட்கோ’ மூலம் புதிய மகளிர் தொழிற்பூங்காக்கள் குறு, சிறு-நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அறிவிப்பு
சட்டசபையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானியக்கோரிக்கையில் 35 அறிவிப்புகளை அமைச்சர் மதன் ராஜா வெளியிட்டார். அதில் சில அறிவிப்புகள் வருமாறு:-
கைவினை தொழில்களை ஊருக்குவிக்கும் நோக்கில் ‘வெற்றி கைவினை கலைஞர்கள் திட்டம்’ எனும் திட்டம் செயல்படுத்தப்படும்.
மகளிர் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் பயன் பெறும் வகையில் ‘சிட்கோ’ மூலம் 8 மாவட்டங்களில் 9 இடங்களில் (சென்னை மாதவரம், மதுரை திருவாதவூர், திருச்சி துறையூர் மற்றும் மணப்பாறை, சேலம் பெரியசீரகப்பாடி, திருப்பத்தூர் முன்னூர், தூத்துக்குடி சங்கராப்பேரி, நெல்லை நரசிங்கநல்லூர், தஞ்சை பாளையப்பட்டி) மொத்தம் 108.28 ஏக்கர் பரப்பளவில் ரூ.237.56 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய மகளிர் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும். இதன்மூலம் 5,100 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
‘சிட்கோ’ மூலம் திருவள்ளூர் (நாயுடுகுப்பம், கண்ணன்கோட்டை, தோர்வாய் கண்டிகை) மற்றும் காஞ்சீபுரம் (எருமையூர், வரதராஜபுரம்) மாவட்டங்களில் மொத்தம் 234.38 ஏக்கரில் ரூ.171.39 கோடி திட்ட மதிப்பீட்டில் 5 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்துக்கு நவீன வசதிகள் கொண்ட கட்டிட வளாகம் ரூ.2.43 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும். இவ்வாறு அமைச்சர் அறிவிப்புகளை வெளியிட்டார்.