காவிரி கரையோர கிராமங்களில் செங்கல் உற்பத்தி பாதிப்பு
திருச்சி, செப்.2 களிமண் எடுப்பதற்கு அனுமதி இல்லாததால் காவிரி கரையோர கிராமங்களில் செங்கல் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சிமாவட்டத்தில் காவிரி ஆறு கரையோரத்தில் உள்ள திருவளர்ச்சோலை உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளன. இந்த செங்கல் சூளைகளில் காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்லும் போது செங்கல் தயாரிக்க முடியாது. ஆனால் இந்த ஆண்டு ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால் செங்கல் உற்பத்தி தொடர்ந்து நடந்து வருகிறது.
இது தொடர்பாக செங்கல் சூளை அதிபர் ஒருவர் கூறியதாவது:- செங்கல் தயாரிப்பிற்கு முக்கிய மூலப்பொருளான களிமண் எடுத்து வருவதில் பல பிரச்சினைகள் உள்ளன. அதிகாரிகள் களிமண் அள்ளுவதற்கு உரிமம் வழங்கிவிட்டால் தான் நாங்கள் இந்த தொழிலை தொடர்ந்து செய்ய முடியும்.
மேலும் தற்போது பெரிய அளவிலான கட்டிடங்கள் கட்டுவதற்கு பெரும்பாலும் சிமெண்டினால் தயாரிக்கப்படும் கல்லை பயன்படுத்துவதால் இவற்றை விற்பனை செய்வதிலும் எங்களுக்கு தொய்வு ஏற்படுகிறது. எனவே களிமண் எடுத்து கொண்டு வருவதற்கு உரிமம் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.