பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு தொடர்பான குழுக் கூட்டம்
திருச்சி, செப். 9 திருச்சி மாவட்டத்தில் 1,263 பள்ளிகளில் மேலாண்மை குழு மறுகட்டமைப்பு செய்யப்பட உள்ளது. பள்ளிக்கல்வித் துறை சார்பில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு தொடர்பான குழுக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் தலைமை வகித்தார்.
இதில், அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் மறு கட்டமைப்பு செய்யப்பட்டு, உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த உறுப்பினர்களின் பதவி காலம் 2026 ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்தது. 2026-28 ஆம் ஆண்டுக்கான பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, திருச்சி மாவட்டத்தில் முதல்கட்டமாக வரும் 12ஆம் தேதி 421 தொடக்கப் பள்ளி களிலும், இரண்டாம் கட்டமாக 19ஆம் தேதி 416 தொடக்கப் பள்ளிகளிலும், மூன்றாம் கட்டமாக 26-ஆம் தேதி 206 நடுநிலைப் பள்ளிகளிலும், நான்காம் கட்டமாக அக். 10ஆம் தேதி 220 அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் என மொத்தம் 1,263 பள்ளிகளில் மறுகட்டமைப்பு செய்யப்பட உள்ளது.
இதை, நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட மற்றும் வட்டார பார்வையாளர் குழு கண்காணிக்க வேண்டும். பள்ளி மறுகட்டமைப்பு நடைபெறும் நாளன்று அனைத்து பெற்றோர்களும் கலந்து கொண்டு பள்ளியின் வளர்ச்சிக்கு உதவிட வேண்டு மென ஆட்சியர் தெரிவித்தார்.
முன்னதாக, கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். பாலாஜி, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் தமிழ்மணி, லால்குடி வருவாய் கோட்டாட்சியர் க. ஸ்ரீதர் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.