சாலை விபத்தில் சிக்கி கோமா நிலையை அடைந்த வனத்துறை அதிகாரி குடும்பத்திற்கு ரூ.2 கோடி இழப்பீடு
திருச்சி, செப். 14 சாலை விபத்தில் சிக்கி கோமா நிலையை அடைந்த வனத்துறை அதிகாரி குடும்பத்திற்கு ரூ.2 கோடி இழப்பீடு
சாலை விபத்தில் காயம் அடைந்து கோமா நிலையை அடைந்த வனத்துறை அதிகாரி குடும்பத்திற்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்குவதற்கான காசோலை திருச்சி மக்கள் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.
வழக்குகளை சமரச அடிப்படையில் தீர்வுகாண்பதற்கான ‘லோக்ச அதாலத்’ எனப்படும் மக்கள் நீதிமன்றம் நேற்று திருச்சி மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட் நீதிபதி கிறிஸ்டோபர் தலைமையில் நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த வனத்துறை அதிகாரி குடும்பத்திற்கு அதிகபட்சமாக ரூ.2 கோடியை இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடாக வழங்கவேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீடாமங்கலத்தை சேர்ந்த வனத்துறை மேற்பார்வையாளரான சத்திய குமார் (வயது 46) என்பவர் கடந்த 17-3-2018 அன்று வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது வேன் மோதியதில் கொடும்காயம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னரும் அவர் குணம் அடையாமல் தற்போது வரை கோமா நிலையில் உள்ளார்.
இதன் காரணமாக அவரது மனைவி தனலட்சுமி மற்றும் 2 மகள்கள் சார்பில் திருச்சி 3-வது சப்-கோர்ட்டில் வக்கீல்கள் முத்துமாரி, சுதர்சன் மூலம் வழக்கு தொடரப்பட்டது. சுமார் 8 ஆண்டுகள் நிலுவையில் இருந்து வந்த இந்த வழக்கு தான் நேற்று சமரச அடிப்படையில் தீர்வு காணப்பட்டு அதற்கான காசோலை சத்தியகுமாரின் மனைவி தனலட்சுமியிடம் வழங்கப்பட்டது. இதுதவிர தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.34 லட்சம் உள்ளிட்ட பல வழக்குகளிலும் நேற்று தீர்வு காணப்பட்டு காசோலைகள் வழங்கப்பட்டது.